ODI WC 2023 Newzealand Team: ஹாட்ரிக் தோல்வியா? உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் பலம் & பலவீனம் என்ன? - ஓர் அலசல்
உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக, இந்த தொகுப்பில் அறியலாம்
ODI WC 2023 Newzealand Team: உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் விவரங்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.
உலகக்கோப்பை தொடர்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தியாவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனிடையே, கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு முறையும் இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும் கோப்பையை வெல்லாத, நியூசிலாந்து அணியின் பலம், பலவீனம், எதிர்த்து விளையாட உள்ள அணிகளின் விவரங்கள், விளையாட உள்ள மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நியூசிலாந்து அணி வீரர்கள்:
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில், டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர் , டிம் சவுத்தி, வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணியின் பலம்:
நவீன கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கேன் வில்லியம்சன், அதிக அனுபவம் வாய்ந்த கேப்டன்களில் ஒருவராகவும் உள்ளார். அவரது தலைமையின் கீழ் களமிறங்குவதே நியூசிலாந்து அணியின் முதன்மையான பலமாக கருதப்படுகிறது. தொடர்ந்து, அந்த அணியின் அபரிவிதமான பந்துவீச்சு எதிரணிகளை திணறடிக்கும் வகையில் அமைந்துள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட் தலைமையில், டிம் சவுதி, பெர்கூசன் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் வேகப்பந்து வீச்சில் பலமான யூனிட்டாக நியூசிலாந்து திகழ்கிறது. மேற்குற்ப்பிட்ட வீரர்கள் அனைவருமே ஐபிஎல் தொடரில் இந்தியாவில் அதிகம் விளையாடி இருக்கும் அனுபவம், அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் மற்றும் அபாரமான திறமையையும் கொண்ட மிட்செல் சாண்ட்னர் மற்றும் இஷ் ஷோதி ஆகியோர் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சு யூனிட்டை பலமாக்கியுள்ளனர். நல்ல பிட்னஸ் உடன் திகழும் நியூசிலாந்து வீரர்கள் ஃபீல்டிங்கிலும் அசத்தி வருகின்றனர். அதோடு, கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் வெற்றிக்காக போராடும் அந்த எண்ணம், மற்ற எந்த அணியை காட்டிலும் நியூசிலாந்திடம் சற்று அதிகமாகவே இருப்பது அவர்களின் தனிச்சிறப்பாகும்.
நியூசிலாந்து அணியின் பலவீனம்:
நியூசிலாந்து அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சை சமாளிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். டேரில் மிட்செல், கான்வே மற்றும் கிளென் பிலிப்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்த சூழலில், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் உலகக்க்கோப்பை தொடர் நடைபெறுவது, நியூசிலாந்திற்கு சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, வெறும் 18 போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய மைதானங்களில் நியூசிலாந்து அணியின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை நம்மால் அறிய முடிகிறது. வில்லியம்சன் உள்ளிட்ட சில வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு நேரடியாக உலகக்கோப்பையில் களமிறங்கும் சூழலில், அவர்களது ஃபார்மும் கேள்விக்குறியாகவே உள்ளது.
நியூசிலாந்து அணியின் போட்டி விவரங்கள்:
தேதி | போட்டி விவரங்கள் | மைதானம் |
அக்டோபர் 5 | நியூசிலாந்து - இங்கிலாந்து | அகமதாபாத் |
அக்டோபர் 9 | நியூசிலாந்து - நெதர்லாந்து | ஐதராபாத் |
அக்டோபர் 13 | நியூசிலாந்து - வங்கதேசம் | சென்னை |
அக்டோபர் 18 | நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் | சென்னை |
அக்டோபர் 22 | நியூசிலாந்து - இந்தியா | தர்மசாலா |
அக்டோபர் 28 | நியூசிலாந்து - ஆஸ்திரேலியா | தர்மசாலா |
நவம்பர் 1 | நியூசிலாந்து - தென்னாப்ரிக்கா | புனே |
நவம்பர் 4 | நியூசிலாந்து - பாகிஸ்தான் | பெங்களூரு |
நவம்பர் 9 | நியூசிலாந்து - இலங்கை | பெங்களூரு |
உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி:
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை, நியூசிலாந்து அணி இதுவரை ஒருமுறை கூட கைப்பற்றியதில்லை. கடந்த இரண்டு தொடர்களிலும் இறுதிப்போட்டி வரையில் முன்னேறினாலும், கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. அதோடு, 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நடைபெற்ற, 4 தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையும் நியூசிலாந்து அணியையே சேரும்.