(Source: ECI/ABP News/ABP Majha)
ODI WC 2023 Tickets: உலகக்கோப்பைக்கு டிக்கெட்! இதுலையும் வெயிட்டிங் லிஸ்ட்டா? காத்திருந்து காண்டாகும் ரசிகர்கள்!
ஐசிசி உலகக்கோப்பைத் தொடரை இம்முறை இந்தியா நடத்துகிறது. இந்தியாவில் உள்ள 12 சிறந்த மைதானங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஐசிசி உலகக்கோப்பைத் தொடரை இம்முறை இந்தியா நடத்துகிறது. இந்தியாவில் உள்ள 12 சிறந்த மைதானங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் 12 மைதானங்களையும் மேம்படுத்தி வருகின்றது. இந்திய அணி இந்த ஆண்டு தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கின்றது. இந்நிலையில் இந்த போட்டி உட்பட இந்தியா பங்கேற்குஜ் டிக்கெட் விற்பனை இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் புக்-மை-ஷோவில் விற்பனை செய்யப்பட்டது.
உலகக்கோப்பை போட்டியைக் காண ஏரளமான ரசிகர்கள் புக் - மை- ஷோ தளத்திற்கு சென்றதால் தளமே ஸ்தம்பித்துள்ளது, டிக்கெட் புக் செய்ய வந்த ரசிகர்களை காத்திருக்கச் செய்துள்ளது. அதிலும் ஒரு சிலருக்கு எல்லாம் 4 மாதங்கள் காத்திருக்கும்படி கூறியதால் ரசிகர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். 4 மாதங்களுக்குள் தொடர் முடிந்து அனைவரும் அடுத்த வேலையை பார்க்கச் சென்று விடுவார்கள் என புலம்பி வருகின்றனர்.
இன்று விற்பனை செய்யப்பட்டது முற்றிலும் மாஸ்டர் கார்டு வைத்திருக்கும் ரசிகர்கள் மட்டும் முன்பதிவு செய்பவர்களுக்கானது. இதன் மூலம் இந்திய அணி பயிற்சி ஆட்டங்கள் இல்லாமல் விளையாடவுள்ள லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. டிக்கெட்டுகளின் துவக்க விலை ஆடுகளத்திற்கு ஆடுகளம் மாறுபட்டது. இந்திய ரசிகர்களுக்கு ஒரு கட்டணமும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஒரு கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு அரையிறுதிப் போட்டிக்கும் இறுதிப் போட்டிக்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
மற்ற அனைத்து பயனர்களுக்கான டிக்கெட் விற்பனையும் கீழே உள்ள கட்டங்களின்படி பிரிக்கப்பட்டுள்ளது:
ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8 மணி முதல்: இந்தியா அல்லாத வார்ம்-அப் போட்டிகள் மற்றும் அனைத்து இந்தியா அல்லாத மற்ற அணிகளின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு 8 மணி முதல்: கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு 8 மணி முதல்: சென்னை, டெல்லி மற்றும் புனேவில் நடைபெறும் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு 8 மணி முதல்: தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 8 மணி முதல்: பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு 8 மணி முதல் : அகமதாபாத்தில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி இரவு 8 மணி முதல் : அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.