Hardik Pandya Ruled Out: காலில் ஏற்பட்ட காயம்.. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடாத ஹர்திக்.. ஆட்டம் காணுமா இந்தியா?
Hardik Pandya Ruled Out: ஹர்திக் பாண்டியா இல்லாதது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கும்.
நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை 2023 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். வருகின்ற அக்டோபர் 22ம் தேதி தர்மசாலாவில் நியூசிலாந்துக்கு எதிரான 5வது போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி கடும் சவாலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஹர்திக் பாண்டியா இல்லாதது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கும்.
கடந்த அக்டோபர் 19ம் தேதி (நேற்று) வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின்போது ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மைதானத்திற்கு வெளியே சென்ற அவர், ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டா அவர் இந்திய அணி பேட்டிங் செய்தபோது டிரஸ்ஸிங் அறைக்கு திரும்பினார். இப்போது சமீபத்திய தகவலின் படி, பாண்டியா தர்மசாலா செல்லமாட்டார் என கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மருத்துவ உதவிக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) செல்ல இருக்கிறார். நியூசிலாந்து எதிரான போட்டிக்கு பிறகு இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை லக்னோவில் விளையாட இருக்கிறது. அந்த போட்டியில் பங்கேற்க ஹர்திக் பாண்டியா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் செயல்திறன் சராசரியாகவே உள்ளது. பந்துவீச்சில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அங்கு அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் எடுத்தார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பந்துவீசிய கோலி:
அக்டோபர் 19ஆம் தேதி (நேற்று) வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின் போது ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். இதனால் அவரால் முதல் ஓவரை கூட முழுமையாக முடிக்க முடியவில்லை. பின்னர், விராட் கோலி அவருக்கு பதிலாக 3 பந்துகளை வீசினார். இதன்மூலம் விராட் கோலி சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துவீசினார்.
புனேயில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி:
புனேயில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் உலகக் கோப்பையில் தனது 4 வெற்றியை தொடர்ந்தது இந்தியா. இந்த உலகக் கோப்பையில் இந்தியா பெற்ற நான்காவது வெற்றி இதுவாகும். ரோஹித் சர்மா படை நேற்றைய போட்டியில் 51 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ரோஹித் சர்மா (48 ரன்கள்), சுப்மன் கில் (53 ரன்கள்)ஆகியோருக்குப் பிறகு, விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து வலுவான இன்னிங்ஸ் விளையாடினார். கிங் கோலிக்கு பின் களமிறங்கிய கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழப்புக்கு வெற்றி பாதக்கு அழைத்து சென்றனர்.