ODI WC Eng Vs NZ: ஐசிசி உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி - நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பழிவாங்குமா நியூசிலாந்து?
ODI WC Eng Vs NZ: அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
ODI WC Eng Vs NZ: ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, கடந்த உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்து - நியூசிலாந்து மோதல்:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இன்று தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன், கடந்த தொடரில் இரண்டாவது இடம்பிடித்த நியூசிலாந்து மோதுகிறது. தொடரை வெற்றிகரமாக தொடங்க இங்கிலாந்து அணியும், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிவாங்க நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டும் என்பதால், போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
பலம் & பலவீனங்கள்:
இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடரை, இங்கிலாந்து 3-1 என கைப்பற்றியது. ஆனால், உலகக் கோப்பை சூழல் வேறுமாதிரியாக இருக்கும் என கருதப்படுகிறது. இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அதேநேரம், இங்கிலாந்து அணியில் உள்ள ஆல்-ரவுண்டர்கள் அந்த அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.இன்றைய போட்டியில் பேட்டிங்கில் நியூசிலாந்தின் கான்வேயும், பந்துவீச்சில் இங்கிலாந்தின் மார்க் உட்டும் அசத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் வ்ல்லியம்சன் விளையாடாதது நியூசிலாந்திற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
நேருக்கு நேர் & சாதனைகள்:
ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 95 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 44 முறை வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் ட்ராவில் முடிய, 4 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் - 408/9
இங்கிலாந்திற்கு எதிராக நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் - 398/5
நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோர் - 89
இங்கிலாந்திற்கு எதிராக நியூசிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோர் - 134
நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்து வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் - பென் ஸ்டோக்ஸ் (182)
இங்கிலாந்திற்கு எதிராக நியூசிலாந்து வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் - கப்தில் (189)
அகமதாபாத் மைதானம் எப்படி?
அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆறு கருப்பு மண் ஆடுகளங்களும், ஐந்து சிவப்பு மண் ஆடுகளங்களும் உள்ளன. சிவப்பு மண் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கின்றன. அதே சமயம் கருப்பு மண் ஆடுகளங்கள் ஸ்லோவர்களுக்கு சாதகமாக உள்ளன. பேட்ஸ்மேன்கள் நேரம் எடுத்து செட்டில் ஆகிவ்ட்டால் ரன்கள் குவிக்க அதிக வாய்ப்புள்ளது. கிடைக்கும் ஆடுகளத்தை பொறுத்து போட்டியின் போக்கு மாறலாம். இன்றைய போட்டியின் போது மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், போட்டியின் முடிவில் பனி ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதனை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன்கள் செயல்பட வேண்டியது அவசியம்.
உத்தேச வீரர் விவரங்கள்:
இங்கிலாந்து:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் குர்ரன், மார்க் வூட், அடில் ரஷித், ரீஸ் டாப்லி
நியூசிலாந்து:
டெவோன் கான்வே, வில் யங், மார்க் சாப்மேன்/மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி, டிம் சவுத்தி, மாட் ஹென்றி, டிரெண்ட் போல்ட்
யாருக்கு வெற்றி வாய்ப்பு:
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்