Australia WC 2023 Squad: உலகக்கோப்பையை எடுத்து வைக்கணுமோ! தரமான 15 பேரை களமிறக்கிய ஆஸ்திரேலிய அணி..!
இந்தியாவில் நடைபெறும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை , ஆஸ்திரேலிய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு, கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சென்னையில் விளையாட உள்ளது. இடந்த தொடருக்காக ஏற்கனவே 18 பேர் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்து இருந்தது. இந்நிலையில், 15 பேர் கொண்ட அணியை அந்த அணி நிர்வாகம் இறுதி செய்துள்ளது.
15 பேரின் விவரங்கள்:
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மூத்த வீரர்கள் காயம்:
கேப்டன் கம்மின்ஸ், மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் ஆகியோர், தற்போது தான் காயத்திலிருந்து மீண்டு வருகின்றனர். இருப்பினும் இவர்கள் அனைவரும் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் கூட இந்த நான்கு பேரும் இடம்பெறவில்லை. வேகப்பந்துவீச்சாளரான அப்பாட் முதன்முறையாக உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
சமபலத்தில் ஆஸ்திரேலியா:
5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா மார்ஷ், ஸ்டோய்னிஷ், கேமரூன் கிரீன் மற்றும் அப்பாட் என வலுவான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுடன் இந்த முறை களமிறங்கிறது. அதோடு, ஆஷ்டன் அகர், மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா என 3 சுழற்பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வரும் வீரர்கள் மீண்டு வந்தால்,பேட்டிங்கிலும் அந்த அணி வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீக்கப்பட்ட இளம் வீரர்கள்:
உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியாவின் உத்தேச அணியில் ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி, வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லீஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான தன்வீர் சங்கா ஆகிய இரண்டு இளம் வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். ஆனால், அவர்கள் இறுதி அணியில் இடம்பெறவில்லை.
தயாராகும் அணிகள்:
உலகக்கோப்பை தொடர் தொடங்க சரியான இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள சூழலில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகளை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் அணி விவரங்களை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் உத்தேச அணியும் வெளியாகியுள்ளது.ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்த பென் ஸ்டோக்ஸ், உலகக்கோப்பை தொடருக்காக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட வில்லியம்சன் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதோடு, இந்த அணிகள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன. ஆஸ்திரேலியா தென்னாப்ரிக்காவிற்கு எதிராகவும், இங்கிலாந்து நியூசிலாந்திற்கும் எதிராகவும் விளையாடி வருகின்றன. இந்தியா உள்ளிட்ட ஆசிய அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வருகின்றன.