(Source: ECI/ABP News/ABP Majha)
AUS vs NZ: உலகக் கோப்பையில் இன்று மோதும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து! ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
2023 உலகக் கோப்பையில் இந்த மைதானத்தில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும், டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்கள்.
2023 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இன்று (அக்டோபர் 28) ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கிறது. இங்குள்ள ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும். எனவே, இன்றைய போட்டியிலும் ஆடுகளத்தின் தன்மையில் பெரியளவில் மாற்றம் ஏற்பட வாய்பில்லை.
மைதானம் எப்படி?
தரம்சாலா ஆடுகளத்தில் நடந்த போட்டியில், இரண்டு இன்னிங்ஸின் ஆரம்ப பவர்பிளேயில் அதாவது முதல் 10 ஓவர்களில் புதிய பந்தில் அபாரமான ஸ்விங் இருக்கும். இன்றைய போட்டியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் இன்னிங்ஸின் தொடக்கத்தில் நல்ல பார்மில் பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், போட்டியின் மீதமுள்ள ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓரளவுக்கு பின் வாங்கும்போது பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க முயற்சிக்கலாம். இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் தங்கள் பங்கிற்கு விக்கெட்டை வீழ்த்தி தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.மொத்தத்தில் இங்கு பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
2023 உலகக் கோப்பையில் இந்த மைதானத்தில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும், டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்கள். இதுவரை இங்கு நடந்த போட்டிகள் அனைத்தும் பகல்-இரவு ஆட்டமாகவே இருந்தது. ஆனால், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பகல் நேரத்தில் நடைபெற இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஏதேனும் தாக்கம் ஏற்படுமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதாவது இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணியும் முதலில் பேட்டிங் செய்ய விரும்பலாம்.
வானிலை எப்படி இருக்கிறது?
தரம்சாலாவில் வழக்கம் போல் லேசான மேக மூட்டம் இருக்கும். லேசான சூரிய ஒளியும் இருக்கும். பிற்பகலில் அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரியை எட்டும். இன்று இங்கு மழைக்கு வாய்ப்பு இல்லை. ஒட்டுமொத்தமாக, இன்று தரம்சாலாவின் வானிலை கிரிக்கெட் விளையாட வழிவிடும்.
தரம்சாலா மைதானத்தின் புள்ளி விவரம்:
இந்த மைதானத்தில் இதுவரை 8 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இரண்டு முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணி 300 ரன்களை கடந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்துள்ள அணிகள் 200 ரன்களைக் கூட எடுக்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆடுகளத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 பந்துவீச்சாளர்கள் அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 உலகக் கோப்பையில் தரம்சாலா ஆடுகளம்:
2023 உலகக் கோப்பையில் இந்த மைதானத்தில் இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ளன. இந்த நான்கில், மூன்று போட்டிகள் 150 முதல் 275 வரையிலான குறைந்த ஸ்கோராகவே பதிவாகியுள்ளது. இருப்பினும், இங்கு ஒரு போட்டியில் இங்கிலாந்தும் 364 ரன்கள் எடுத்திருந்தது. அதாவது, பேட்டிங்கை புத்திசாலித்தனமாக செய்தால், இங்கு நல்ல ஸ்கோரை எடுக்க வாய்ப்பு உள்ளது.
இரு அணிகளும் இதுவை நேருக்குநேர்:
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 141 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 95 போட்டிகளிலும், நியூசிலாந்து 39 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், 7 முறை போட்டிகளில் முடிவில்லாமலும் போயுள்ளது.
உலகக் கோப்பையில் இரு அணிகளும் எப்படி..?
விளையாடிய போட்டிகள் | 11 |
ஆஸ்திரேலியா வென்ற போட்டிகள் | 8 |
நியூசிலாந்து வென்ற போட்டிகள் | 3 |
முடிவு இல்லை | – |
டிரா | – |
வெற்றி% ( ஆஸ்திரேலியா ) | 72.72% |
வெற்றி % (நியூசிலாந்து) | 27.28% |