David Warner: பொங்கசோறும் வேணாம்.. பூசாரித்தனமும் வேண்டாம் மொமெண்ட்.. No Thanks சொன்ன டேவிட் வார்னர்
அடுத்த ஐபிஎல் சீசனுக்கு வார்னர் கேப்டனாக வேண்டும் என பதிவிட்டிருந்த கமெண்ட்டுக்கு, “வேண்டாம், நன்றி” என வார்னர் பதில் அளித்திருப்பது வைரலாகி வருகின்றது.
2021 ஐபிஎல் தொடர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்தது. தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணியாக இருந்தது. அணியை ஒற்றை ஆளாக இத்தனை வருடம் தங்கி வந்த வார்னரின் மோசமான ஃபார்மும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்தாண்டு 8 போட்டிகளில் விளையாடிய அவர் 185 ரன்களை மட்டுமே அவர் அடித்தார். அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டீவாக இருக்கும் வார்னர், அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடுவர். அந்த வரிசையில், சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் ரசிகர் பக்கம் ஒன்றில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு வார்னர் பதில் அளித்திருக்கிறார். ஹைதராபாத் அணி ரசிகர் ஒருவர், அடுத்த ஐபிஎல் சீசனுக்கு வார்னர் கேப்டனாக வேண்டும் என பதிவிட்டிருந்த கமெண்ட்டுக்கு, “வேண்டாம், நன்றி” என வார்னர் பதில் அளித்திருப்பது வைரலாகி வருகின்றது.
முன்னதாக, அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்திருந்த வார்னர் "என்ன காரணம் என 100 சதவீதம் எனக்குத் தெரியாது. சன்ரைசர்ஸ் நிர்வாகத்தினர் மீதும், பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ், லட்சுமண், டாம் மூடி, முரளிதரன் ஆகியோர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். ஒரு முடிவு எடுக்கப்படும்போது, அது ஒருமனதாக எடுக்க வேண்டும். ஆனால், எனக்கான மாற்று வீரர் யார், என்னை யார் தேர்வு செய்ய வேண்டும், என்னை யார் விரும்பவில்லை என எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால், கடைசி நாளில், நான் விளையாடப் போவதில்லை என்ற தகவல் மட்டும் என்னிடம் கூறப்பட்டது. எனக்கு இது மிகுந்த வேதனையாக இருந்தது. நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கும் விளக்கம் அளிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் கூறப்படவில்லை.
கடந்த காலங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை வைத்து சில விஷயங்கள் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் நான் சன்ரைசர்ஸ் அணிக்காக 95 போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். ஆனால், 4 போட்டிகளில் மட்டும்தான் மோசமாக விளையாடினேன், 2 முறை ரன் அவுட் ஆகினேன். அதிலும் சென்னை போன்ற மெதுவான, மந்தமான ஆடுகளத்தில்தான் இது நடந்தது. இதுபோன்ற கசப்பான விஷயங்களை ஜீரணிப்பது கடினமானது. ஆனால், நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம், பதில் இனிமேல் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. ஆதலால் அடுத்த கட்டத்துக்கு நான் நகர்ந்துதான் ஆக வேண்டும். அடுத்துவரக் கூடிய ஐபிஎல் ஏலத்தை நோக்கியிருக்கிறேன். சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை, ஆனால் முடிவு உரிமையாளர்களிடம் உள்ளது." என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்