IND vs NZ 2nd ODI: நெருப்பாய் பந்துவீசிய இந்தியா.. பொறுப்பின்றி அவுட்டான நியூசிலாந்து.. 109 ரன்கள்தான் டார்கெட்..!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 50 ஓவர்களில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்துடன் 349 ரன்கள் குவித்த போதும் போராடியே வெற்றி பெற்றது.
2வது போட்டி
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரை இழக்கக்கூடாது என நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டி வருகிறது.
டாஸ் வென்ற ரோகித்:
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர்.
தடுமாறிய நியூசிலாந்து:
தொடக்க ஆட்டக்காரர்களாக ஆலன் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர். ஆனால், ரன் கணக்கை தொடங்கும் முன்பே, முதல் ஓவரின் 5வது பந்தில் ஆலன் போல்டாகி வெளியேறினார். போட்டியின் 6வது ஓவரில் நிகோலஸ் முகமது சிராஜ் வீசிய பந்தில் சுப்மன் கில்லிடன் கேட்ச் ஆகி அவுட்டாகி வெளியேறினார். அவர் 20 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுத்தார்.
அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மிட்ஷ்லெல் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தினார். இதற்கடுத்து பாண்ட்யா பந்துவீச்சில் காட் & போல்ட் முறையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். aவரை தொடர்ந்து, கேப்டன் லாதம் 17 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தாகூர் பந்து வீச்சில் அவுட்டானர். இதன் மூலம், 15 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது.
.@Sundarwashi5 🤝 @surya_14kumar
— BCCI (@BCCI) January 21, 2023
New Zealand 9 down as Lockie Ferguson gets out.
Follow the match ▶️ https://t.co/tdhWDoSwrZ #TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/tQiYfWQan5
நியூசிலாந்து ஆல்-அவுட்
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரேஸ்வெல், இன்றைய போட்டியில் 22 ரன்கள் எடுத்து இருந்த போது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே தடுமாறிய நியூசிலாந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட, சாண்ட்னர் 27 ரன்கள் எடுத்திருந்த போது பாண்ட்யா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
சாண்ட்னர் - பிலிப்ஸ் ஜோடி 7வது விக்கெட்டிற்கு 47 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் பந்துவீச்சை ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடிய பிலிப்ஸ், 36 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த பெர்கூசன் மற்றும் டிக்னெர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி, 34.3 ஓவர்களில், 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக, ஷமி 3 விக்கெட்டுகளையும், பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 109 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.