Ranji Trophy: 42வது முறையாக ரஞ்சிக் கோப்பை வென்ற மும்பை; விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
2023 - 2024ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையை மும்பை அணி வென்றுள்ளது. இது மும்பை அணி வெல்லும் 42வது ரஞ்சிக் கோப்பையாகும்.
ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணி விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையையும் வென்றுள்ளது. மேலும், மும்பை வெல்லும் 42வது ரஞ்சிக் கோப்பை இதுவாகும்.
மார்ச் 10ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மும்பை அணியில் அதிகபட்சமாக ஷ்ர்துல் தாகுர் 75 ரன்களும் பிரித்வி ஷா 46 ரன்களும் சேர்த்திருந்தனர். விதர்பா அணி சார்பில் ஹார்ஷ் துபே மற்றும் யாஷ் தக்கூர் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விதர்பா அணி சார்பில் யாஷ் ரதோட் 27 ரன்களும் அதர்வா டைடே 23 ரன்களும் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கோட்டியன் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி, மிகச் சிறப்பாக விளையாடியது. குறிப்பாக முஷிர் கான் 136 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 95 ரன்களும், அஜங்க்யா ரஹானே 73 ரன்களும் மற்றும் ஸ்யாம்ஸ் முலானி 50 ரன்களும் சேர்த்திருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்கள் சேர்த்தது. விதர்பா அணி சார்பில் ஹார்ஷ் துபே 5 விக்கெட்டுகளும் யாஷ் தக்கூர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய விதர்பா அணி சிறப்பாக விளையாடி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்தது. குறிப்பாக முதல் இன்னிங்ஸ் போல சொதப்பாமல் அதிரடியான ஆட்டத்தினையும் பொறுப்பான ஆட்டத்தினை அணி வீரர்கள் வழங்கினர். ஆனாலும் அது விதர்பா அணிக்கு போதுமானதாக இல்லை. விதர்பா அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான அக்ஷய் வட்கர் 199 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டினை இழந்தார். கருண் நாயர் 74 ரன்களும் ஹர்ஷ் துபே 65 ரன்களும் சேர்த்திருந்தனர்.
இறுதியில் விதர்பா அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் 42வது முறையாக கோப்பையை வென்றது.