Mohammed Shami: மீண்டும் கம்பேக்.. முகமது ஷமி சொன்ன முக்கிய தகவல்! ரசிகர்கள் குஷி
இந்திய அணிக்காக எனது கம்பேக் எப்போது இருக்கும் சொல்ல முடியவில்லை. ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பாக பெங்கால் அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடுவேன் என்று முகமது ஷமி கூறியுள்ளார்.
மீண்டும் கம்பேக்:
இந்தியா தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்தவகையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. அதேபோல் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிந்தது. இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முடிகிறது. இதனைத்தொடர்ந்து இந்தியா தங்களது ஹோம் கிரவுண்டில் விளையாட உள்ளது.
வங்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடர், நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் அதேபோல் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதனால் கடந்த சில தொடர்களில் விளையாடாத சீனியர் வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றனர். முக்கியமாக இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த தொடர்களில் இணைய உள்ளார்.
கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். அப்போது காலில் ஏற்பட்ட காயம் கரணமாக லண்டனில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் இந்த தொடர்களுக்கு தயாராவதற்காக முகமது ஷமி தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு திரும்புவேன்:
இச்சூழலில் தான் தனது கம்பேக் குறித்து முகமது ஷமி பேசியுள்ளார். அதில்,"இந்திய அணிக்காக எனது கம்பேக் எப்போது இருக்கும் என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பாக நிச்சயம் பெங்கால் அணிக்காக சில ரஞ்சி போட்டிகளில் விளையாடுவேன்.
2 அல்லது 3 போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் உள்ளது. அதன்பின் இந்திய அணிக்கு திரும்புவேன். இந்த காயம் இவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் காயம் இருந்தாலும், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னரே சிகிச்சை எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் உலகக்கோப்பையின் போதே காயத்தின் தீவிரம் தெரிந்தது. எனது காயத்தை பார்த்து மருத்துவர்களே கொஞ்சம் ஆச்சரியமடைந்தனர்" என்று முகமது ஷமி கூறியுள்ளார்.
மேலும் படிக்க:Watch Video: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனையிடம் சக வீரர் காதல் ப்ரபோஸ் - ஓகே சொன்னாரா?
மேலும் படிக்க:Paris Olympics 2024: ஜஸ்ட் மிஸ் ஆன பதக்கம்..சோகத்தில் மனு பாக்கர்! ரசிகர்கள் ஆறுதல்