Moeen Ali Test: 2021ல் ரிடையர்மெண்ட்..! ஆஷஷ் தொடரில் மீண்டும் மொயீன் அலி.. காரணம் தெரியுமா?
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த மொயீன் அலி, நடப்பாண்டு ஆஷ்ஷ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த மொயின் அலி, நடப்பாண்டு ஆஷ்ஷ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற மொயின் அலி:
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான மொயின் அலி கடந்த 2021ம் ஆண்டே அறிவித்து விட்டார். இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீ ஆகியோர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தனது முடிவை திரும்பப் பெறுவதாக மொயின் அலி அறிவித்துள்ளார்.
மீண்டும் இங்கிலாந்து அணியில் மொயின் அலி:
இதையடுத்து ஆஷஷ் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மொயின் அலியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ஜாக் லீச்சிற்கு மாற்றாக மொயின் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் 16ம் தேதி எக்பாஸ்டனில் தொடங்க உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் மொயின் அலி:
பர்மிங்காமில் பிறந்த 35 வயதான மொயின் அலி இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பாண்டு ஆஷஷ் தொடரின் முதல் போட்டியில் மொயின் அலி விளையாடினால், அது அவருக்கு 64வது போட்டியாகும். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அவர் 2,914 டெஸ்ட் ரன்களையும், டெஸ்ட் அளவில் 195 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய மொயின் அலி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே பெரிதாக சோபிக்கவில்லை. இந்த சூழலில் தான், அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதேநேரம், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அவர் ஏற்கனவே தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷஷ் தொடருக்கான இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங்கு, கிறிஸ் வூக்ஸ்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதல்:
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் தொடர், கிரிக்கெட் உலகின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடர் கடந்த 1882ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 72 முறை ஆஷஷ் தொடர் நடைபெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா 34 முறையும், இங்கிலாந்து அணி 32 முறையும் தொடரை கைப்பற்றியுள்ளது. 6 முறை தொடர் சமனில் முடிந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.