BCCI President: விசில் போடு..! பிசிசிஐ தலைவராகும் முன்னாள் சிஎஸ்கே வீரர் - பதவிக்கு பாஜக தீவிரம்?
BCCI President: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக, முன்னாள் சிஎஸ்கே வீரர் மிதும் மன்ஹாஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BCCI President: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக, முன்னாள் சிஎஸ்கே வீரர் மிதும் மன்ஹாஸ் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ-யின் புதிய தலைவர் யார்?
ஜம்மு-காஷ்மீரில் இருந்து இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற வீரரான மிதுன் மன்ஹாஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த பிசிசிஐ கூட்டத்தில் இந்தப் பதவிக்கான சிறந்த வேட்பாளராக மன்ஹாஸ் உருவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இவர் துலீப் டிராபிக்கான வடக்கு மண்டலத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சி ஊழியர்கள் குழுவில் ஒருவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் (ஜேகேசிஏ) நிர்வாகியாக மன்ஹாஸ் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?
இந்திய அணிக்கான சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பை மிதுன் பெறவில்லை. ஆனால் முதல் தர கிரிக்கெட்டில் அவர் மிகவும் பிரபலமானவராக இருந்தார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்காக விளையாடியுள்ளார். அவரது முதல் தர கிரிக்கெட் கெரியரில் 157 போட்டிகளில் விளையாடி 9,714 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், 70 வயதை கடந்ததால் ரோஜர் பின்னி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து காலியாக உள்ள பிசிசிஐ தலைவர் பதவிக்கு மன்ஹாஸ் முன்னணி போட்டியாளராக உள்ளாராம்.
பிசிசிஐ பதவிக்கு பாஜக தீவிரம்:
கர்நாடக மூத்த வீரர் பட் பொருளாளர் பதவிக்கும், சத்தீஸ்கர் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த பிரப்தேஜ் சிங் பாட்டியா இணைச் செயலாளர் பதவிக்கும் முன்னணி வேட்பாளர்களாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோக, முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரின் பெயர்களும், தலைவர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலில் அடிபடுகிறது. கூடுதலாக, ஆளும் பாஜக தங்கள் தரப்பினரை முக்கிய இடங்களில் நியமிக்க ஆர்வமாக உள்ளதால், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மோரும் பிசிசிஐ நிர்வாக பதவிகளில் ஏதேனு ஒன்றை பெற வாய்ப்புள்ளதாம்.
புதிய ஐபிஎல் தலைவர் யார்?
இதுபோக ஐபிஎல் தலைவராக புதியவர் ஒருவரை நியமிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. காரணம் தற்போதைய ஐபிஎல் தலைவர் அருண் துமல் ஆறு வருட ஒட்டுமொத்த காலத்தை முடித்த பிறகு கட்டாய இடைவெளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்கிடையில், அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய சீனியர் ஆண்கள் தேர்வுக் குழுவில் எஸ். ஷரத்துக்குப் பதிலாக பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூனியர் தேர்வுக் குழுத் தலைவராக வி.எஸ். திலக் நாயுடுவுக்குப் பதிலாக ஷரத் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிசிசிஐ-யின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















