Ravi Shastri about Virat Kohli: இது மட்டும் நடந்தால் கோலி ஆஸ்திரேலியாவிற்கு நிச்சயம் வலியை கொடுப்பார் - ரவி சாஸ்திரி
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் சதையில் குத்திய முள்ளாக கோலி இருப்பார் என, இந்திய அணியின் மூத்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி கருத்து:
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. இதனிடையே இந்த தொடர் குறித்து இருநாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, ”ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், களமிறங்கும் முதல் இரண்டு இன்னிங்ஸில் கோலி நல்ல தொடக்கத்தை பெற்று, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால், அதற்கடுத்து அந்த தொடர் முழுவதும் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு சதையில் குத்திய முள்ளாக வலியை கொடுப்பார்” என கூறியுள்ளார்.
கோலி வலியை கொடுப்பார்
தனியார் தொலைக்காட்சிக்கு ஆன்லைன் வாயிலாக பேட்டி அளித்த ரவிசாஸ்திரி, ”ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி படைத்துள்ள சாதனைகள் அவரை மேலும் சிறப்பாக செயல்பட தூண்டும். இதற்காக அவர் தொடரை நன்றாக தொடங்க விரும்புவார். அவருடைய முதல் இரண்டு இன்னிங்ஸ்களைப் பார்க்க வேண்டும். அவர் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்று விட்டால், பின்பு ஆஸ்திரேலியாவிற்கு அவர் சதையில் குத்தியமுள்ளாக இருப்பார். அது நடக்க வேண்டும் என்று கோலி நிச்சயமாக விரும்புவார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவரது சராசரி 50-க்கும் சற்றே குறைவாக தான் உள்ளது. இது அவரை இந்த தொடரிலும் சிறப்பாக செயல்பட உதவும்” என ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா Vs கோலி:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 36 இன்னிங்ஸில் களமிறங்கி 1682 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 48.06 என்ற சராசரியுடன் 7 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 169 ஆகும். அதேநேரம், கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்த தொடரில் கோலி மொத்தமாகவே வெறும் 46 ரன்களை மட்டுமே குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் கோலி:
கோலி கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசினார். அதைதொடர்ந்து தற்போது வரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலியின் சராசரி வெறும் 23.60 மட்டுமே ஆகும். அதுதொடர்பாகவும், கடந்த சில ஆண்டுகளில் கோலி விளையாடிய சிவப்பு பந்து கிரிக்கெட்டின் அளவு அவருக்கு எதிராக இருக்குமா என்றும் ரவி சாச்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிகம் விளையாடியவர் யார்? என்று பதிலளித்தார். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பாக விளையாடுவார் என்ற தனது நம்பிக்கையை, ரவி சாஸ்திரி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.