Watch Video: அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள்! ரஷீத்கானை பொளந்து கட்டிய பொல்லார்ட் - நீங்களே பாருங்க
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹண்ட்ரட்ஸ் போட்டியில் ரஷீத்கான் வீசிய ஒரே ஓவரில் பொல்லார்ட் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெறுவது போலவே உலகெங்கிலும் பல்வேறு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தி ஹண்ட்ரட்ஸ் எனப்படும் இந்த தொடர் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து 5 சிக்ஸர்:
இங்கிலாந்தின் சவுதாம்படன் நகரில் நேற்று நடந்த போட்டியில் சதர்ன் ப்ரேவ் அணியும் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் முதலில் ஆடிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 126 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சதர்ன் ப்ரேவ் அணி களமிறங்கியது.
சதர்ன் ப்ரேவ் அணிக்காக மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேன் கீரன் பொல்லார்ட் களமிறங்கினார். அவர் ரஷீத்கான் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான ரஷீத்கானின் ஓவரிலே தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசியது ட்ரெண்ட் அணியினருக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kieron Pollard hitting FIVE SIXES IN A ROW! 😱#TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/WGIgPFRJAP
— The Hundred (@thehundred) August 10, 2024
மிரட்டிய பொல்லார்ட்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான பொல்லார்ட் மும்பை அணி கோப்பையை வெல்வதற்கும், மும்பை அணி பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தவர். ஒரு ஜாம்பவானின் பந்துவீச்சை மற்றொரு ஜாம்பவான் சிக்ஸர்களாக விளாசியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிறப்பாக ஆடிய ரஷீத்கான் 23 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் ஒரு பந்து மீதம் வைத்து சதர்ன் ப்ரேவ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷீத்கான் அதிகபட்சமாக 20 பந்துகளில் 1 விக்கெட் மட்டுமே எடுத்து 40 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
அலெக்ஸ் டேவிஸ், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் தலா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக அதிகபட்சமாக டாம் பன்டன் 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.