India Vs England Test: இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அணிக்கு ஆலோசனை சொன்ன ஆலன் டொனால்ட்..
இந்திய அணியை வீழ்த்துவதற்கான ஆலோசனைகளை இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கியுள்ளார் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஆலன் டொனால்ட்.
இந்தியா - இங்கிலாந்து:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக தோல்வியை சந்திக்காமல் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிநடை போடும் இந்திய அணி இந்த முறையும் அதை தக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறது. அதேநேரம் இந்த மோசமான சாதனையில் இருந்து வெளியேறி இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்று இங்கிலாந்து அணி எதிர்பார்த்து காத்திருக்கிறது. இச்சூழலில் தான் இந்திய அணியை வீழ்த்துவதற்கான ஆலோசனைகளை இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கியுள்ளார் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஆலன் டொனால்ட்.
முன்னதாக தென்னாப்பிரிக்க டி20 தொடரின் போது பேசிய அவர், “முதலில் புதிய பந்தை கொண்டு வீசும் முதல் 25 – 30 ஓவர்களின் முக்கியத்துவத்தை பற்றி நான் பேசுகிறேன். அந்த ஓவர்களில் எப்போதும் லென்த் கொஞ்சம் ஃபுல்லராக இருந்து ஸ்டம்பை அட்டாக் செய்வதாக இருக்க வேண்டும். அப்போது நேராக ஃபீல்டர்களை நிறுத்த வேண்டும். ஏனெனில் பிட்ச்சில் நமக்கு எந்த கேரியும் கிடைக்காது என்பது நமக்கு தெரியும். எனவே அனைத்து பந்தையும் ஸ்டம்ப் நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். ஒருவேளை லேசான ஸ்விங் கிடைத்தால் நமக்கு கிடைக்கும் சிறிய நேரத்தில் அதை செய்ய வேண்டும்.
விக்கெட்டுகளை எடுக்கலாம்:
புதிய பந்தை தாண்டி எதிர்மறையான ஃபீல்டை செட்டிங் செய்யக் கூடாது. தேவைப்பட்டால் மட்டும் மிட் விக்கெட் மற்றும் கவர்ஸ் திசையில் எக்ஸ்ட்ரா ஃபீல்டரை நிறுத்தலாம். பயிற்சியாளர்களாக நாங்கள் எப்போதும் நேராக பந்து வீசுங்கள் என்றே பவுலர்களிடம் சொல்வோம். மேலும் புதிய பந்தில் ஆஃப் ஸ்டம்ப்பில் எங்களுடைய பெரும்பாலான பந்துகளை பார்க் செய்ய நினைப்போம்.
நாங்கள் விளையாடி சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் களத்தில் இருக்கும் போது நாங்கள் அவரை தாண்டி செல்ல முயற்சிப்போம். குறிப்பாக ரன்கள் கொடுப்பதை பற்றி கவலைப்படாமல் அவரை அட்டாக் செய்ய முயற்சி செய்வோம். இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பேட்ஸ்மேன்களின் பார்ட்னர்ஷிப் பெரிதாகும் போது பந்து பழையதாக மாறி கொஞ்சமும் ஸ்விங் ஆகாது. அது வேகப்பந்து வீச்சாளர்களை மனதளவில் சோதிக்கும். ஆனால் நாங்கள் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பவுலர்களை தேர்ந்தெடுப்போம். எனவே குறுகிய நேரத்தில் ஸ்பின்னர்களின் உதவியுடன் சில விக்கெட்டுகளை எடுக்கலாம்" என்று கூறியுள்ளார்.