IPL: வருஷத்துக்கு ரூ.58 கோடி.. அள்ளிக் கொடுத்த ஐபிஎல் நிறுவனம்? ”நோ” சொல்லி ஓடிய கம்மின்ஸ், ஹெட்
IPL T20 Franchise: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிலிருந்து விலகி தங்களுக்காக விளையாடினால், ஆண்டுக்கு ரூ.58 கோடி ஊதியம் தருவதாக, ஐபிஎல் நிறுவனம் கம்மின்ஸ் மற்றும் ஹெட்டை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL T20 Franchise: கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகமாட்டோம் என, கம்மின்ஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
நோ சொன்ன கம்மின்ஸ் & ஹெட்:
கேட்போரை வாயை பிளக்கச் செய்யும் வகையில் ஊதியத்தை அள்ளிக் கொடுப்பதாக கூறியும், ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலக கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும் 10 அணிகளில் ஏதோ ஒரு அணியின் நிர்வாகம் இருவரையும் அணுகியுள்ளது. அப்போது, ஆஸ்திரேலியா அணியிலிருந்து விலகி, தங்கள் அணி சார்பில் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்றால், ஆண்டுக்கு 58 கோடி ரூபாய் ஊதியமாக வழங்க தயார் என தெரிவித்துள்ளனர். ஆனால், கம்மின்ஸ் மற்றும் ஹெட் ஆகிய இருவருமே, இந்த வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
அழைப்பு விடுத்த அணி நிர்வாகம் எது?
ஐபிஎல் தொடரில் தற்போது பேட் கம்மின்ஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகிய இருவருமே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகின்றனர். அந்த நிர்வாகம் ஐபிஎல் மட்டும் இன்றி, தென்னாப்ரிக்க டி20 தொடரிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் எனும் அணியை கொண்டுள்ளது. அதிலும் கம்மின்ஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட்டை விளையாட செய்ய, ஐதராபாத் அணி அவர்களை அணுகி இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
ஐபிஎல் ஊதியம் என்ன?
ஆரம்பத்தில் ரூ.20.5 கோடிக்கு கம்மின்ஸை ஏலத்தில் எடுத்த ஐதராபாத் அணி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்திற்கு முன்பாக ரூ.18 கோடிக்கு அவரை தக்கவைத்துக் கொண்டது. அதேநேரம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராகவும் திகழும் கம்மின்ஸ், ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து சுமார் ரூ.17.48 கோடியை ஊதியமாக பெறுகிறார். அதாவது சர்வதேச போட்டிகளில் ஆண்டு முழுமைக்கும் விளையாடி வாங்கும் ஊதியத்தை காட்டிலும், ஐபிஎல் போட்டியில் வெறும் 2 மாதங்களுக்கு அதிக ஊதியம் வாங்குகிறார். மறுபுறம், 2024ம் ஆண்டு 6.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ட்ராவிஸ் ஹெட், 2025ம் ஆண்டில் 14 கோடி ரூபாய்க்கு ஐதாராபாத் அணியால் தக்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார்மயமாகும் பிக்பேஷ் லீக்?
கம்மின்ஸ் மற்றும் ஹெட் இருவரும் ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் உறுதியாக இருப்பதாக, இந்த தகவலை வெளியிட்ட The Age செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வீரர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் தனியாரின் நடவடிக்கைகளானது, ஆஸ்திரேலியாவின் முதன்மையான டி20 கிரிக்கெட் லீக்கான பிக் பேஷ் லீக்கை தனியார்மயமாக்குவதற்கு உந்துதலாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், மாநில கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் வீரர்கள் சங்கத்தினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.




















