ICC T20 Ranking: டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள 2 இந்திய பேட்ஸ்மேன்கள்! யார் யார் தெரியுமா?
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் 10 இடங்களில் 2 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். அவர் 863 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி வங்காளதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து, இந்திய அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்திய அணிக்கு இது மூன்றாவது வெற்றி ஆகும். குரூப் 2 பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இன்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்தியா, குரூப் 2 புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் வங்கதேசம் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரை சதம் பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்களையும், வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 30 ரன்களையும் விளாசினார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். அவர் 863 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 842 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து வீரர் டெவன் கான்வே 792 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி 638 புள்ளிகளுடன் 10வது இடத்துக்கு முன்னேறினார். டாப் 10 லிஸ்ட்டில் 2 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
டி20 தரவரிசை பட்டியலில் ஆப்கன் பந்துவீச்சாளர் ரஷித் கான் முதலிடத்திலும், இலங்கை வீரர் ஹசரங்கா 3 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்திலும் உள்ளார். டி20 ஆல்-ரவுண்டர் பட்டியலில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலாவது இடத்தில் உள்ளார். இந்த டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹார்திக் பாண்டியா உள்ளார். டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா மட்டுமே ஆவார்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட ஐசிசி டெஸ்ட் பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி வீரர் விராட் கோலி 10ஆவது இடத்தை பிடித்து கடும் சரிவை சந்தித்திருந்தார். பவுலிங்கில் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசாக்னே முதல் இடம் பிடித்துள்ளார். ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு பின் தங்கி இருந்தார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டு இடங்கள் சரிந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.