Rahul Dravid: கேப்டன்சியில் இருந்த நீக்கப்பட்ட விராட் கோலி.. அதிரடியாக பேசிய டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி நாளை தென்னாப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிறது. செஞ்சுரியன் நகரில் அமைந்துள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்பதால் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமைந்துள்ளது.
இந்நிலையில் எப்போதும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய கேப்டன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் நாளைய போட்டிக்கு முன்பாக முதல் முறையாக கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி,”தென்னாப்பிரிக்க தொடருக்கு இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகி உள்ளது. குறிப்பாக வலை பயிற்சி, ஃபில்டிங், பேட்டிங் என அனைத்து வகையில் சிறப்பாக தயாராகியுள்ளோம். இந்தத் தொடர் நமக்கு நன்றாக அமையும் என்று நம்புகிறோம்” எனக் கூறினார்.
💬 💬 We've got some good quality practice over the week.
— BCCI (@BCCI) December 25, 2021
Head Coach Rahul Dravid speaks about the #TeamIndia's preparation in the lead up to the first #SAvIND Test. pic.twitter.com/bCjXbveV0I
இந்த செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் டிராவிட்,”உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவு. அந்த முடிவிற்குள் நான் போக விரும்பவில்லை. அத்துடன் உள்ளே நடைபெற்ற கூட்டத்தில் பேசியது எதுவுமே வெளியே சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதில் என்னுடைய பங்கு என்னவென்று யாருக்கும் தெரிவிக்க தேவையில்லை. ஒரு அறைக்குள் நடந்த அறையில் நான் என்ன சொல்லவேண்டுமோ அதை கூறிவிட்டேன். அங்கு நான் பேசியதை இப்போது வெளியே சொல்ல சரியான நேரம் இது அல்ல. மேலும் இதுபோன்ற விஷயங்களை நான் எப்போதும் வெளியே சொல்வதில்லை” எனப் பதிலளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்வதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் டி20 கேப்டன் பதவியிலிருந்து தன்னை விலக வேண்டாம் என்று யாரும் கூறவில்லை என்று கூறியிருந்தார். அவருக்கு முன்பாக பேசியிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி,”விராட் கோலியை தான் பதவி விலக வேண்டாம் என்று கேட்டு கொண்டேன்” எனத் தெரிவித்திருந்தார். இதன்காரணமாக விராட் கோலியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: செல்ஃபினா.? தோள் மேல கைபோடுவியா? கடுப்பான ஹர்திக்.! குவியும் கண்டனம்.! வைரல் வீடியோ !