INDvsIRL: சாதனை படைத்த புவனேஸ்வர் குமார்.... அயர்லாந்தை ஊதித் தள்ளிய இந்தியா.!
நேற்றைய போட்டியில் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் புவனேஸ்வர் குமார் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனினும் டாஸ் போடப்பட்ட பிறகு மழை பெய்தது. இதனால் 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
இந்தியா வெற்றி:
அதில் முதலில் ஆடிய அயர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டர்லிங் மற்றும் பால்பிரையன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ஹரிஸ் டெகார் மட்டும் சிறப்பாக விளையாடி 64* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் அயர்லாந்து அணி 12 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.
109 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தீபக் ஹூடா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக தொடங்கினர். இஷான் கிஷன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இறுதியில் தீபக் ஹூடா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 9.2 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
புவனேஸ்வர் குமார் சாதனை:
இந்தப் போட்டியில் பந்துவீச்சின் போது இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் ஒரு சாதனையை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் தன்னுடைய முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் அயர்லாந்து வீரர் பால்பிரையன் விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளேவில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 60 டி20 இன்னிங்ஸில் விளையாடியுள்ள புவனேஸ்வர் குமார் பவர்பிளேவில் 34 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச டி20 போட்டியில் பவர்பிளேவில் அதிக வீழ்த்திய வீரர்கள்:
புவனேஸ்வர் குமார்- 34 விக்கெட்
சாமுவேல் பத்ரி- 33 விக்கெட்
டிம் சௌதி- 33 விக்கெட்
ஷகிப் அல் ஹசன்- 27 விக்கெட்
ஹேசல்வூட்- 26 விக்கெட்
Bhuvneshwar Kumar magic in the opening over. pic.twitter.com/tdvdwy06PF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 26, 2022
இதன்மூலம் டிம் சௌதி மற்றும் சாமுவேல் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி புவனேஸ்வர் குமார் முதலிடம் பிடித்துள்ளார். இவை தவிர ஐபிஎல் டி20 போட்டிகளின் வரலாற்றில் முதல் 6 ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் புவனேஸ்வர் குமார் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்