Rohit Sharma Cricket: 16 வருஷம் ஆகிடுச்சு.. ”இந்த 5 மேட்ச்ச மறக்கவே முடியாது” மனம் திறந்த கேப்டன் ரோகித் சர்மா..!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தனது வாழ்நாளின் மிக முக்கியமான 5 போட்டிகள் தொடர்பாக பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தனது வாழ்நாளின் மிக முக்கியமான 5 போட்டிகள் தொடர்பாக பேசியுள்ளார்.
ரோகித் சர்மா..!
இந்திய அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா, உலக கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். பல ஆண்டுகளாக தொடரும் அவரது ஆட்டத்தால் கிரிக்கெட் வாழ்வில் மறக்கமுடியாத பல்வேறு தருணங்களை உருவாக்கியுள்ளார். 36 வயதான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள நிலையில், அண்மையில் அமெரிக்காவில் தனது கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார். அங்கு அவர் அளித்த ஒரு நேர்காணலில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் மறக்க முடியாத ஐந்து தருணங்கள் குறித்து பேசியுள்ளார்.
அந்த 5 தருணங்கள்:
அதன்படி, 2007ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற அறிமுக டி-20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வென்றது, தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியது, 2021ம் ஆண்டு கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது, 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காமன்வெல்த் தொடரின் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்களை சேர்த்தது, தனது வாழ்நாளில் மறக்க முடியாத மிகவும் முக்கியமான கிரிக்கெட் தருணங்கள் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு திரும்பும் ரோகித்..!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடிய ரோகித் சர்மாவிற்கு, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 36 வயதான அவர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ள, நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனவும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 எனவும் இந்திய அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதில் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கபப்ட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் முடிந்ததும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி அதிகப்படியான டி-20 போட்டிகளில் விளையாடுவதும், கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு அதிகம் ஓய்வளிப்பதும் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.