Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஆல்ரவுண்டர் அஸ்வின். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அஸ்வின் ஓய்வு:
பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் இந்திய அணியை தோல்வியில் இருந்து மழையும், ஆகாஷ்தீப் – பும்ரா ஜோடியும் காப்பாற்றிய நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் உள்ள நிலையில், இந்தியா தோல்வியைத் தவிர்த்ததை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அஸ்வினின் அறிவிப்பு அமைந்துள்ளது. ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்திருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 ஆண்டுகள் இந்திய அணிக்காக பயணம்:
தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட 38 வயதான அஸ்வின் இந்திய அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 2010ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ஆடினார். அவரது சிறப்பான பந்துவீச்சால் அதே மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகம் ஆனார். பின்னர், 2011ம் ஆண்டு வெஸ்ட் இணடீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தவர் கும்ப்ளே, ஹர்பஜன் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு தலைமை தாங்கினார். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்சில் 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 200 இன்னிங்சில் பந்துவீசியுள்ளார்.
பேட்டிங்கிலும் அசத்தல்:
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 8 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் ஆடி 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக மட்டுமின்றி, சிறந்த பேட்ஸ்மேனாகவும் அஸ்வின் அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 151 இன்னிங்சில் பேட்டிங் செய்து 3 ஆயிரத்து 503 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 1 அரைசதத்துடன் 707 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 184 ரன்கள் எடுத்துள்ளார்.
மேட்ச் வின்னர்:
சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளில் ஐபிஎல் தொடரில் 211 போட்டிகளில் ஆடி 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 800 ரன்களை ஐபிஎல் தொடரில் விளாசியுள்ளார். 1 அரைசதங்கள் எடுத்துள்ளார். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அசத்திய அஸ்வின் பல போட்டிகளில் இந்திய அணியை தனது அபார திறமையால் வெற்றி பெற வைத்தார்.