IND Vs Aus Final: பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் மிரட்டும் இந்தியர்கள் - ஆஸ்திரேலியாவின் கெட்ட கனவு..!
IND Vs Aus CWC Final: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஷமி, குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய அணி பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம், உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
IND Vs Aus CWC Final: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் வீரர்களில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட் சேர்த்த விரர்களின் பட்டியலில் ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா பைனல்:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 13வது உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 2003ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கு, ஆஸ்திரேலியாவை பழிவாங்கும் நோக்கில் இந்திய அணி களமிறங்க உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு, இந்த மைதனாத்தில் அதிகம் விளையாடி இருக்கும் அனுபவத்தோடு இந்திய பந்துவீச்சாளர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, தற்போதைய இந்திய பந்துவீச்சாளர்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தி உள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
உள்ளூர் மைதானங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா:
சர்வதேச போட்டிகளில் மட்டுமின்றி ஐசிசி தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணி பல தசாப்தங்களாகவே தொடர்ந்து கோலோச்சி வருகிறது. அந்த அணி 5 முறை ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல, ஆஸ்திரேலியாவில் இடம்பெற்று இருந்த உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி அபாயகரமான பேட்ஸ்மேன்களும் முக்கிய காரணம். ஆனால், அவர்களுக்கே இந்தியாவிற்கு வந்து தொடரை வெல்வது என்பது கடினமான காரியம் தான். அந்த அளவில் இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளூர் மைதானங்களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்க்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில், முன்னாள் கேப்டன் கபில்தேவ் முதலிடம் வகிக்கிறார். அவர் 39 இன்னிங்ஸ்களில் 45 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
புயலாய் மிரட்டும் முகமது ஷமி:
இந்த பட்டியலில் தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 23 இன்னிங்ஸ்களில் 38 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ரன் ரேட்டும் வெறும் 6.04 மட்டுமே என வியக்கத்தகுந்த வகையில் உள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவ்ற்கு எதிராக இந்தியாவில் மட்டுமே 16 போட்டிகளில் விளையாடி, ஷமி 28 விக்கெட்டுகளை தட்டி தூக்கியுள்ளார்.
சுழலில் குழப்பும் ஜடேஜா:
ஷமி ஒருபுறம் வேகப்பந்துவீச்சில் புயலாய் வீச, மறுபுறம் ஜடேஜாவும் சுழற்பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு குடைச்சல் அளித்து வருகிறார். 40 இன்னிங்ஸ்களில் 37 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒரு போட்டியில் 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை எடுத்தது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜடேஜாவின் சிறந்த பந்துவீச்சாகும். மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவில் மட்டுமே 25 போட்டிகளில் விளையாடி, ஜடேஜா 30 விக்கெட்டுகளை தட்டி தூக்கியுள்ளார். இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சைனா மேன் குல்தீப்:
ஜடேஜாவிற்கு பக்க பலமாக குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக. 21 இன்னிங்ஸ்களில் 31 விக்கெட்டுகளை சேர்த்துள்ளார். 54 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தது அவரது சிறந்த பந்துவீச்சாகும். உள்ளூரில் மட்டும் 17 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை சேர்த்துள்ளார்.
பூம் பூம் பும்ரா:
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 20 இன்னிங்ஸ்களில் விளையாடி 28 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஒரு போட்டியில் 61 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்ததே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிறந்த பந்துவீச்சாகும்.