India wins U19 world cup: வரலாறு படைக்கப்பட்டது... 5வது முறையாக U19 உலகக்கோப்பையை தட்டி தூக்கியது இந்திய அணி
8வது முறையாக, U19 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் விளையாடி இந்திய அணி, 5வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யஷ் துல் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது.
இதற்கு முன்பு, முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி 2000-ம் ஆண்டு முதல் முறையாக U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. அதனை அடுத்து, 2008-ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 2012-ம் ஆண்டு உன்முக்த் சந்த் தலைமையிலும், 2018-ம் ஆண்டு ப்ரித்வி ஷா தலைமையிலும் இந்திய அணி U19 உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறது. 8வது முறையாக, U19 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, 5வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
இங்கிலாந்தை ஆல்-அவுட் செய்த இந்திய அணி:
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற U19 இங்கிலாந்து அணி, பேட்டிங் தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வந்த வேகவத்தில் ஓப்பனர் ஜேக்கப் பெத்தல், ரவி குமாரின் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய பேட்டர்களையும் ரன்கள் எடுக்கவிடாமல் பெவிலியன் அனுப்பி கொண்டே இருந்தனர் இந்திய பவுலர்கள். இங்கிலாந்து அணிக்காக ஒற்றை ஆளாக களத்தில் நின்று ரன் சேர்த்தார் ஜேம்ஸ் ரூ. இவர் மட்டும் 95 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராட, மற்ற பேட்டர்கள் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய பவுலர்களைப் பொருத்தவரை ராஜ் பவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும், கெளஷல் டம்பே 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதனால், 44.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. இதனால், U19 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍5⃣!#TeamIndia are bringing home the ICC #U19CWC 🏆 for the fifth time! 💙#BelieveInBlue #BoysInBlue #ENGvIND #FutureStars pic.twitter.com/g1QmMdBnDj
— Star Sports (@StarSportsIndia) February 5, 2022
வெற்றியை சேஸ் செய்த இந்திய அணி:
இலக்கை சேஸ் செய்த இந்திய அணிக்கு, ஓப்பனர் அங்கிரிஷ் டக்-அவுட்டாகி ஷாக் கொடுத்தார். முதல் ஓவரிலேயே விக்கெட் சரிந்ததால் பதற்றத்துடன் சேஸிங்கை தொடங்கியது இந்திய அணி. ஒன் டவுன் களமிறங்கிய ஷேக் ரசீத் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். அவரை அடுத்து களமிறங்கிய நிஷாந்த், அவர் பங்கிற்கு 50* எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற பேட்டர்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், ரன் சேர்த்து இலக்கை நெருங்க உதவினர். இதனால், 47.4 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது இந்திய அணி. 4 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி, 5வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்