India vs Australia: "இன்னும் பந்துவீச்சில் பயிற்சி வேண்டும்…"காயத்தில் மீண்டு வந்த ஜடேஜாவை கடுமையாக சாடிய கவாஸ்கர்!
அது ஏற்றுக்கொள்ள முடியாதது... அவருக்கு இரண்டு ஆட்ட நாயகன் விருதுகள் உள்ளன. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பராஸ் மம்ப்ரே (பந்துவீச்சு பயிற்சியாளர்) அவருடன் அமர்ந்து பேச வேண்டும்.
இந்திய அணியின் முக்கியமான ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டு வந்ததில் இருந்து சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு நல்ல பங்களிப்பை வழங்கி வருகிறார். அவர் தனது பரபரப்பான மறுபிரவேசத்தின் மூலம் அந்த நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளார். அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து முழங்கால் காயம் ஜடேஜாவை 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக்கி வைத்தது. அவர் இந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல ஃபார்மில் ஜடேஜா
காயத்திலிருந்து திரும்பிய ஜடேஜா தனது அணியான சவுராஷ்டிரா அணிக்காக ரஞ்சி டிராபி ஆட்டத்தில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அவர் தனது செயல்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசியதோடு, ஆறாவது பேட்ஸ்மேனாகவும் களம் இறங்கி நல்ல பங்களிப்பை கொடுத்து, இரண்டு ஆட்டத்திலுமே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நோ-பால் பிரச்சனை
ஜடேஜாவின் ஆல்-ரவுண்ட் ஷோ அனைவரையும் கவர்ந்தாலும், அவரை கவாஸ்கர் ஒரு காரணத்திற்காக விமர்சிக்கிறார். ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய பிறகு பல நோ-பால்களை வீசுகிறார் என்ற குற்றச்சாட்டுதான் அது. மூன்றாவது டெஸ்டில் புதன்கிழமை, ஜடேஜா மீண்டும் நோ-பால் வீச அது பெரிதாக இந்திய அணியை பாதிக்கவில்லை. ஆனால் இரண்டாவது நோ-பாலில் மார்னஸ் லாபுசாக்னே போல்டாகி இருந்தார். நோ-பாலாக வீசியதால் அவர் உயிர் பிழைத்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான சுனில் கவாஸ்கர், அதிக நோ-பால் வீசியதற்காக அவரை கடுமையாக விமர்சித்தார்.
பயிற்சி செய்ய வேண்டும்
"அது ஏற்றுக்கொள்ள முடியாதது... அவருக்கு இரண்டு ஆட்ட நாயகன் விருதுகள் உள்ளன, ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் நோ-பால்களை வீசுவது மிகவும் மோசமானது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பராஸ் மம்ப்ரே (பந்துவீச்சு பயிற்சியாளர்) அவருடன் அமர்ந்து பேச வேண்டும். அவரைக் கோட்டிற்கு பின்னால் இருந்து பந்துவீசச் செய்ய வேண்டும். அவர் மார்னஸ் லாபுஸ்சேக்னேவை அவுட்டாகியுள்ளார், இந்த பந்து நோ-பாலாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் டக் அவுட்டாகியிருப்பார்," என்று கவாஸ்கர் மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டில் வர்ணனை செய்யும் போது கூறினார். இறுதியில் லாபுஷாக்னே 31 ரன்களில் ஜடேஜாவிடமே தனது விக்கெட்டை பறிகொடுத்தார், ஆனால் ஆஸ்திரேலியா 14 ரன்களில் முதல் அடியை சந்தித்த பிறகு, தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.