Asia cup 2023: முடிவுக்கு வருகிறது ஆசிய கோப்பை பிரச்சினை? மத்தவங்களுக்கு பாக்., - இந்தியாவிற்கு யுஏஇ..
பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்பதில், இந்திய அணிக்கு உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்பதில், இந்திய அணிக்கு உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடப்பாண்டிற்கான ஆசியக்கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்திய அணிக்கான லீக் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானிலேயே நடைபெறும். ஒரு வேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெறும் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2008-க்குப் பின் முதல்முறையாக...
இந்த தகவல் உறுதியாகும்பட்சத்தில் 2008ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசியகோப்பை தொடரை நடத்த உள்ளது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், ஹாங்காங், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கும் இந்த தொடர், செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 15 முறை நடைபெற்ற ஆசியகோப்பை தொடரை, 7 முறை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே உரசல்:
அரசியல் ரீதியாக மட்டுமின்றி, விளையாட்டு போட்டிகளில் கூட இந்திய - பாகிஸ்தான் அணிகள் பரம எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றன. இருநாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தன. பரஸ்பரம் இருநாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு பயணம் செய்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்தன. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால் கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கோ, நமது அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை. ஆசியகோப்பை மற்றும் உலகக்கோப்பை போன்ற ஐசிசி சார்பில் நடத்தப்படும் தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. அந்த வகையில் தான், நடப்பாண்டிற்கான ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவித்த உடனேயே, இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லாது என பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் முடிவு:
இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்வினையாற்றினர். இதனிடையே, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின், ஆசியக்கோப்பை தொடரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு ஏன்:
2009-ஆம் ஆண்டில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த சர்வதேச போட்டிகளும் நடத்தப்படவில்லை. பாகிஸ்தான் அணி மீதான பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. இதன் காரணமாக அண்மையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அண்மையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றன. பாகிஸ்தான் மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்த அணிகள் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தின. ஆனாலும் இந்திய அணி மட்டும் தற்போது வரை பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்து வருகிறது.