India Squad Vs Eng Series: இங்கிலாந்து தொடர் - இந்திய அணி இன்று அறிவிப்பு, வெற்றிடத்தை நிரப்புவது யார்? பேட்டிங் ஆர்டர்
India Squad Vs Eng Series: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு இன்று அறிவிக்க உள்ளது.

India Squad Vs Eng Series: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான புதிய கேப்டனாக, சுப்மன் கில் இன்று அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இன்று அறிவிக்கப்படும் இந்திய அணி:
இங்கிலாந்தில் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரானது ஜுன் 20ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அணியை தேர்வு செய்வதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழு மும்பையில் இன்று கூடுகிறது. இதில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பங்கேற்க உள்ளார். அதனை தொடர்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டு, இங்கிலாந்து தொடருக்கான இந்திய வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட உள்ளன.
புதிய கேப்டனாகும் கில்..!
ரோகித் சர்மாவின் ஓய்வை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தப்போவது யார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. புதிய கேப்டனாக பும்ரா, கில் மற்றும் பண்ட் இடையே கடும் போட்டி நிலவியது. அதன் முடிவில் சுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட இருப்பதும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றும் வெளியாக உள்ளது. அடுத்தடுத்து காயங்களால் அவதிப்படுவதால் பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லை என்றும், நீண்டகால இலக்கினை கருத்தில் கொண்டு இளம் வீரர் கில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்?
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய டெஸ்ட் அணியின் தூண்களாக விளங்கிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்பதே தற்போது பிரதான கேள்வியாக உள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் மாறக்கூடும் என கூறப்படுகிறது. இதற்காக பல இளம் வீரர்களை இந்திய அணியில் களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் அசத்தியவர்கள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்தவர்களை கொண்டு, இந்திய அணிக்கான புதிய பிளேயிங் லெவனை கட்டமைக்க கவுதம் கம்பீரும் முன்வந்துள்ளாராம்.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்:
தொடக்க வீரராக ரோகித் சர்மாவின் இடத்தை கே.எல். ராகுல் பூர்த்தி செய்து, ஜெய்ஷ்வால் உடன் களமிறங்குவார் என கூறப்படுகிறது. மூன்றாவது வீரராக உள்ளூர் போட்டிகளில் அசத்தி வரும் சாய் சுதர்ஷன் அல்லது கருண் நாயர் பெயர் பரிசீலிக்கப்படுகிறது. கோலியின் நான்காவது வீரர் இடத்தில் இனி கேப்டன் கில் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதோடு, அனைத்து வடிவிலான போட்டியில் அசத்தி வரும் ஸ்ரேயாஷ் அய்யரும் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இணையக்கூடும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதனா விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தொடருவார் என்றும், அவருக்கான மாற்றாக த்ருவ் ஜுரெல் தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வில் குழப்பம்:
பவுலிங் யூனிட்டில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் பிரதான தேர்வாக இருக்கிறார். ஆனால், அவர் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், உரிய வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வது சிக்கலான பணியாக உருவெடுத்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஷமியையும் முழுமையாக நம்பமுடியுமா? என பிசிசிஐ சந்தேகிக்கிறது. அதன்படி இந்திய அணி 5 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய விரும்பினால், பும்ரா மற்றும் ஷமியுடன், முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம்.
சுழற்பந்து வீச்சு யூனிட்:
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய சுழற்பந்துவீச்சு பிரிவில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஜோடி ஆதிக்கம் செலுத்தி வந்தது. அஸ்வினின் ஓய்வால் அந்த பிரிவிலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து சூழலை கருத்தில் கொண்டு இந்த தொடரில் தேர்வுக்குழு எத்தனை சுழற்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மூன்று பேர் என முடிவு செய்தால் ஜடேஜா உடன் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் தேர்வாகலாம். இரண்டு பேர் என முடிவு செய்தால் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என தெரிகிறது. சுந்தரின் ஆல்-ரவுண்டர் திறன் காரணமாக அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.
இங்கிலாந்து தொடருக்கான இந்தியாவின் உத்தேச அணி:
கே.எல். ராகுல், ஜெய்ஷ்வால், சாய் சுதர்ஷன், கருண் நாயர், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், த்ருவ் ஜுரெல், பும்ரா, ஷமியுடன், முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் அல்லது அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் படேல்




















