Rishabh Pant : "ஸ்கோர்போர்டில் போதுமான ரன்களுடன் இருந்தோம்.. ஆனாலும்.." - தோல்வி குறித்து ரிஷப்பண்ட் வேதனை..!
ஸ்கோர்போர்டில் போதியளவு ரன்களுடன்தான் இருந்தோம். ஆனாலும் தோற்றுவிட்டோம். எதிரணியை பாராட்ட வேண்டும் என்று இந்திய கேப்டன் ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி போராடி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி ஹர்திக், இஷான்கிஷான் அதிரடியால் 211 ரன்களை குவித்தபோதும், வான்டர் டுசென் மற்றும் டேவிட் மில்லர் அதிரடியால் அந்த அணி 5 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது, “ ஸ்கோர்போர்டில் நாங்கள் போதுமான ரன்களுடன் இருந்தோம். ஆனாலும், எங்கள் செயல்திறனுடன் வெளியேறினோம். ஆனால், எதிரணியை பாராட்ட வேண்டும். நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. இரண்டாம் பாதியில் நன்றாக வேலை செய்யும் என நாங்கள் நினைத்தோம். ஆனால், இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்வதர்களுக்கு அது இன்னும் எளிதாகிவிட்டது. எங்களது ஸ்கோரால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், அடுத்த முறை இதேபோன்ற சூழலில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.” என்று கூறினார்.
இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்த பிறகு, 212 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்தது. இதனால், இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு வான்டர் டுசென்னும், டேவிட் மில்லரும் வில்லன்களாக மாறினர்.
வான்டர் டுசென் 30 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டத்தின் 16வது ஓவரில் அளித்த கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஸ் அய்யர் கோட்டைவிட்டார். அதற்கு தண்டனையாக வான்டர் டுசென் அடுத்த 16 பந்துகளில் 46 ரன்களை விளாசினர். அவர் மொத்தம் 46 பந்துகளில் 75 ரன்களை விளாசி தென்னாப்பிரிக்க வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
டேவிட் மில்லரும் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அளித்த எளிதான வாய்ப்பையும் இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இதன் காரணமாக. தென்னாப்பிரிக்க அணி 5 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புவனேஸ்குமாரின் 4 ஓவர்களில் மட்டம் 43 ரன்களை விளாசினர். ஹர்ஷல் படேல் பந்திலும் 43 ரன்களையும், அக்ஷர் படேல் பந்தில் 40 ரன்களையும் தென்னாப்பிரிக்க வீரர்கள் விளாசினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்