IND Vs WI, 5th T20: சம்பவம் இருக்கு.. தொடரை நிர்ணயிக்கும் 5வது போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு
IND Vs WI, 5th T20: தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
IND Vs WI, 5th T20: தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்:
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றது. இருப்பினும் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும், அடுத்தடுத்து வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
5வது டி-20 போட்டி:
இந்நிலையில் தான், தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் வென்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிரான ஒரு தொடரை கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி இன்றைய போட்டியிலும் வென்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக தோல்வியே சந்தித்ததில்லை என்ற வரலாற்றை தொடர தீவிரம் காட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நிலவரம்:
இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும், கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துள்ளது. அந்த நம்பிக்கையுடன் இன்றைய போட்டியிலும் களமிறங்க உள்ளது. முதல் இரண்டு போட்டிகளின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணமாக இருந்தாலும், அந்த தவறுகளை இந்திய அணி திருத்தி வெற்றிகளை குவித்து வருகிறது. கில், ஜெய்ஷ்வால், திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.
அதேநேரம், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். அதோடு, அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விக்கெட் வேட்டையை நடத்தி வருகின்றனர். மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டால் இன்றய போட்டியில் வென்று, இந்திய அணி தொடரை கைப்பற்றுவது உறுதி. அதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று விதமான தொடர்களையும் கைப்பற்றி, இந்திய அணி இந்த மொத்த சுற்றுப்பயணத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.