Jaiswal: 24 வயசுக்குள் இப்படி ஒரு சாதனையா? ஜெய்ஸ்வால் படைத்த வரலாறு இதுதான்!
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியுள்ள ஜெய்ஸ்வால் புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால நட்சத்திரமாக ஒளிர்பவர் ஜெய்ஸ்வால். அதிரடி, நிதானம் என தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர். இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசியுள்ளார்.
ஜெய்ஸ்வால் அபார சதம்:
தொடக்க வீரராக களமிறங்கிய அவர் டெல்லி மைதானத்தில் இன்று நாள் முழுவதும் பேட்டிங் செய்து 253 பந்துகளைச் சந்தித்து 22 பவுண்டரியுடன் 173 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நாளை இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது அபாரமான சதத்தால் இந்திய அணி 300 ரன்களை கடந்து ஆடி வருகிறது.
24 வயதுக்குள் 7 சதம்:
ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசியுள்ள 7வது சதம் இதுவாகும். இந்த சதம் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால். அதாவது, 24 வயதுக்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை படைத்த ஒரே இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆவார்.
சர்வதேச அளவில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத், தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஸ்மித், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் 24 வயதுக்கு முன்பே 7 டெஸ்ட் சதங்களை விளாசியவர்கள். இவர்களின் வரிசையில் தற்போது ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார்.
🎥 Play that on loop ➿
— BCCI (@BCCI) October 10, 2025
Yashasvi Jaiswal with a memorable day for #TeamIndia 😍
Scorecard ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank | @ybj_19 pic.twitter.com/Q9m93uksHi
ப்ராட்மேன், சச்சின்:
24 வயதுக்கு முன்பே அதிக டெஸ்ட் சதங்களை விளாசியவர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் டான் பிராட்மேன் உள்ளார். அவர் 12 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 11 சதங்கள் விளாசியுள்ளார். 3வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சோபர்ஸ் உள்ளார். அவர் 9 சதங்கள் விளாசியுள்ளார்.
மேலும், இந்த சதம் மூலம் ஜெய்ஸ்வால் மற்றொரு சாதனை படைத்துள்ளார். அதாவது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக சதங்கள் விளாசிய ரிஷப்பண்ட் சாதனையை சமன் செய்துள்ளார். ரிஷப்பண்ட் 6 சதங்கள் விளாசியுள்ளார். இந்த பட்டியலில் சுப்மன்கில் மற்றும் ரோகித் சர்மா தலா 9 சதங்களுடன் முன்னணியில் உள்ளனர்.
அசத்தும் இந்தியா:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லியில் 2வது டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் இந்திய அணி தற்போது 318 ரன்களுடன் ஆடி வருகிறது. 2 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி இமாலய இலக்கை குவிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மிரட்டும் ஜெய்ஸ்வால்:
ஜெய்ஸ்வால் இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் 47 இன்னிங்சில் ஆடி 2245 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 அரைசதங்கள் அடங்கும் 7 சதங்கள் மட்டுமின்றி இரண்டு இரட்டை சதம் விளாசியுள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என ஜாம்பவான் அணிகளுக்கு எதிராகவும் சதம் விளாசியுள்ளார்.
டெஸ்ட் வீரராக மட்டுமின்றி டி20-யிலும் அசத்தி வருகிறார். 23 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியுள்ள ஜெய்ஸ்வால் 723 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 5 அரைசதங்கள், 1 சதம் அடங்கும். உள்ளூர் போட்டிகளில் அபாரமாக ஆடியதால் ஐபிஎல் போட்டிகளில் இடம்பிடித்த ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணிக்காக இதுவரை 66 போட்டிகளில் ஆடி 15 அரைசதங்கள், 2 சதங்கள் என2 ஆயிரத்து 166 ரன்கள் எடுத்துள்ளார்.



















