IND vs SL Asia Cup 2023: இலங்கை ஸ்பின்னில் சுருண்ட இந்தியா: அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள்: 214 ரன்கள்தான் டார்கெட்!
Asia Cup 2023: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
IND Vs SL, Innings Highlights: ஆசிய கோப்பைத் தொடரில் தற்போது சூப்பர் 4 சுற்று மிகவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளில் வங்காளா தேச அணியைத் தவிர மற்ற மூன்று அணிகளான இந்தியா, பாகிஸ்தா மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டது. இதில் ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்றால் அது வங்காள அணிதான்.
இந்நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி இலங்கையில் உள்ள் கொழும்பில் அமைந்துள்ள பிரம்மதேச மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். கில் வழக்கம்போல் பவர்ப்ளே முடியும்வரை நிதான ஆட்டத்தை கடைபிடிக்க, ரோகித் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டு இருந்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களைக் கடந்து வழுவான நிலையில் இருந்தது.
அதன் பின்னர் அதிரடிக்கு கியரை மற்ற நினைத்த கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கில் தனது விக்கெட்டை இழந்தபோது இந்திய அணி 11.1 ஓவரில் 80 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் வந்த விராட் கோலி தனது விக்கெட்டை 2 ரன்களில் இழக்க இதற்கிடையில் ரோகித் தனது 51வது அரைசதத்தினை பூர்த்தி செய்திருந்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 10 ஆயிரமாவது ரன்னை எட்டினார்.
விராட் கோலி தனது விக்கெட்டை இழந்த பின்னர் ரோகித் தனது விக்கெட்டை இழக்க அதன் பின்னர் கைகோர்த்த இஷான் கிஷன் மற்றும் கே.எல் ராகுல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க விடவில்லை என்றாலும் ரன் சேர்ப்பதில் சொதப்பினர்.
இதையடுத்து இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா சொதப்ப, அதன் பின்னர் வந்த டைல் எண்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர். இறுதியில் இந்திய அணி 47 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் 197 சேர்த்த நிலையில் மழை பெய்ததால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
போட்டி சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டாலும் மேற்கொண்டு ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. இறுதியில் இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் சேர்த்தது.
இலங்கை அணி சார்பில் துனித் 5 விக்கெட்டுகளையும் அசலங்கா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நேற்று பாகிஸ்தான் உடனான போட்டிக்குப் பின்னர் இன்று இலங்கைக்கு எதிராக கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியதால் அவர்களுக்கு ஏற்பட்ட சோர்வினால் சிறப்பாக விளையாட முடியவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.