(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SL, 2nd Innings Highlight: இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா...! தாக்குப்பிடிக்குமா இலங்கை...?
IND vs SL, 2nd Innings Highlight: பெங்களூரில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் இரண்டாவது நாளான இன்றைய முடிவில் 447 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி முக்கிய வீரரான திரிமன்னேவின் விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. அவர் பும்ரா பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இன்றைய ஆட்ட முடிவில் இலங்கை 28 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
முன்னதாக, இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடிய இந்திய அணியின் மயங்க் அகர்வால் 22 ரன்களில் வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்களிலும், ஹனுமா விஹாரி 35 ரன்களிலும் சீரான இடைவேளையில் ஆட்டமிழந்தனர். முன்னாள் கேப்டன் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து, களமிறங்கிய ரிஷப் பண்ட் கடந்த இன்னிங்ஸ் போலவே அதிரடியாகவே ஆடினர். அவர் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதேவேகத்தில், 31 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டானார். பின்னர், கடந்த இன்னிங்சில் நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.
அவருக்கு ஓரளவு ஒத்துழைப்பு அளித்த ஜடேஜா 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர், களமிறங்கிய அஸ்வின் 13 ரன்களில் அவுட்டானர். நீண்ட நேரம் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் 8வது விக்கெட்டாக எம்புல்டேனியா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 87 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் இந்திய அணி 303 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இலங்கை அணியில் ஜெயவிக்ரமா 4 விக்கெட்டுகளையும், எம்புல்டேனியா 3 விக்கெட்டுகளையும், விஸ்வா பெர்னாண்டோ, டி சில்வா மற்றும் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து, ஆடிய இலங்கை அணி 28 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்திருப்பதால் இந்திய அணி வெற்றி பெறுவதற்தே வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்