IND vs SL 1st T20: இலங்கையுடன் இன்று முதல் டி20 கிரிக்கெட் போட்டி...! வெற்றியுடன் தொடங்குமா இந்தியா..?
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது இலங்கையுடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதற்காக இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல்பிகாரி வாஜ்பாயி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முன்னணி வீரர் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முகமது ஷமி, ஷிகர்தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இஷான்கிஷான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வரிசையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால் ஒன்டவுனில் இறங்குவார். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சநன், ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பார்கள். ஆல்ரவுண்டர்களான வெங்கடேஷ் அய்யரும், ரவீந்திர ஜடேஜாவும் பின்வரிசையில் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
தசுன் சனாகா தலைமையில் களமிறங்க உள்ள இலங்கை அணியில் பதும் நிசங்கா, தனுஷ்கா குணதிலகா, தினேஷ் சண்டிமால், அசலங்கா, கருணரத்னே ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் லகிரு குமாரா, துஷ்மந்தா சமீரா, பெர்ணாண்டோ ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பந்துவீச்சைப் பொறுத்தவரையில் புவனேஷ்குமார் தலைமை வகிப்பார். இளம் வேகப்பந்துவீச்சாளர்களான ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான் ஆகியோர் முகமது சிராஜிடன் இணைந்து இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் அளிக்க உள்ளனர். சுழலில், சாஹல் கலக்க உள்ளார்.
நடைபெற உள்ள உலககோப்பை தொடரில் இந்திய அணியை தயார் செய்யும் பொருட்டு, இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு பிரதான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணியில் இளம் வீரர்களே இடம்பெற்றாலும், இலங்கை அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணி வலுவாகவே உள்ளது. இந்தப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்