Valimai Review: வலிமையாக வந்துள்ளதா வலிமை? போனியாகுமா போனி கபூர் வியூகம்... எடுபட்டதா அஜித் முயற்சிகள்? உண்மையான வலிமை விமர்சனம் இதோ
Valimai Movie Review Tamil: போனி கபூர் போன்ற ஒரு பெரிய தயாரிப்பாளர், தன் தலைமையில் சுமந்து கொண்டு வந்த பாரத்தை ஒரு வழியாக இறக்கிவிட்டிருக்கிறார்.
H. Vinoth
Ajith Kumar , Kartikeya Gummakonda, Huma Qureshi
Valimai Movie Review Tamil: ஒவ்வொரு அப்டேட்டாக கேட்டு, இறுதியில் படம் எப்படி இருக்கிறது என்கிற அப்டேட்டை நெருங்கிவிட்டது வலிமை. ஊரே கொண்டாடித் தீர்த்த படமாக மாறிய வலிமை, உண்மையில் கொண்டாடப்பட்டதா? கொலம்பியாவில் தொடங்கி, கோடம்பாக்கம் அருகே முடிகிறது கதை. கடத்தி வரப்படும் போதைப் பொருளை, கடத்தி விற்கும் சாத்தான் கும்பலும், அதை ஒழிக்க சென்னை கமிஷனர் ஒருவர் பெரு முயற்சி எடுப்பதும், அதற்காக மதுரையிலிருந்து ஒரு துணை போலீஸ் கமிஷனர் அர்ஜூனை அழைத்து வந்து, சாத்தான் குரூப்பை, சாய்த்தானா அர்ஜூன் என்பது தான் கதை!
கள்ளழகர் இறங்குவதற்கு ஒலிக்கும் மேளதாளங்களின் ஒலியில், அஜித் எண்ட்ரி ஆகும் போது, எந்த அஜித் ரசிகரும் கட்டுப்படுத்தி நாற்காலியில் அமர முடியாது. அந்த அளவிற்கு தொடங்கும் ஆர்ப்பரிப்பு, அதன் பின் சென்னை சென்றதும் கொஞ்சம் குறைகிறது. அதிக சேஸ்... அதிக ரேஸ்... அதிக மாஸ்... என திரைக்கதை ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அதில் அதிகம் ஜெயிப்பது என்னவோ... சேஸ் தான்!
படம் முழுக்க ஹீரோ அஜித்-வில்லன் கார்த்திகேயா தான் வருகிறார். ப்ரேம் பை ப்ரேம்... இருவருக்குமான காட்சிகள் தான் ரீல் முழுக்க! அது அவர்களோடு முடிந்திருந்தால் சரி... அவர்களோடு பைக்குகளும் பயணிப்பதால், சாலையும், சத்தமுமாய் படம் முழுக்க அவையும் பாய்ந்து கொண்டிருக்கின்றன. பைக் சத்தம் பிடிக்காதவர்களுக்கு, அது கொஞ்சமல்ல... ரொம்பவே எரிச்சலூட்டலாம்.
கொரோனா சிக்கலால், படம் தாமதமானதும், அதற்காக திரைக்கதையில் பல சமரசங்கள் மற்றும் மாற்றங்கள் செய்ததும், பட்டவர்த்தனமாக தெரிகிறது. சில காட்சிகள் இது எப்படி? என்கிற எண்ணம் வரும் போது, ‛அது அப்படி தான் ....’ என்கிற விளக்கத்தையும் ஏதோ ஒரு இடத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் வினோத். ஒரிஜினல் ஆக்ஷன் படத்தில் அஜித் வந்து நீண்ட நாளாகிவிட்டது. அதை ஒட்டுமொத்தமாக இறக்கிவிட்டார் இயக்குனார்.
படத்திற்கு பெரும் செலவு, பைக்குகளுக்கு போடப்பட்ட பெட்ரோலுக்காக தான் இருக்கும். குற்றம் செய்யும் கும்பல் பைக்கர்ஸ். அவர்களை கண்டுபிடிக்கும் போலீசும் பைக் ரேஸ் வீரர். இதனால், பைக், பைக், பைக்... படம் முழுக்க பைக். இன்னும் ஒரு ரவுண்ட் வேறு இடத்திலிருந்து விமர்சனத்தை தொடங்கினாலும், மீண்டும் பைக் என்கிற இடத்தில் தான் வந்து முடிகிறது.
ஒரு போலீஸ் அதிகாரி, தன் பணிக்கான கடமையையும், குடும்பத்திற்கான கடமையையும் வலிமையோடு கையாள படும் கஷ்டமே வலிமை! குற்றவாளிகள் தரப்பு நியாயத்தையும், பொதுமக்கள் தரப்பு தவறுகளையும் ‛நாம தான் சிஸ்டம்... நாம தான் சரியா இருக்கனும்’ என, பாலிடிக்ஸ் பேசுவதில் இருந்து, ‛கடவுள் தான் சாத்தான்... சாத்தான் தான் கடவுள்’ என டயலாக் வைத்தது வரை, இயக்குனரின் ஷார்ப் வசனங்கள் மாஸ் ரகம். ஆனாலும், சில வசனங்கள் ‛மியூட்’ ஆவதால், சென்சார் செதுக்கல் தெரிகிறது.
காலாவில் காலும், அரையுமாய் பார்த்த ஹீமா குரேஷி, வலிமையில் வளமாக தெரிகிறார். அஜித்திற்கு அவர் தோழியா, காதலியா, இல்லை அதை தாண்டி வேறு எதுவும் உறவா... என்கிற குழப்பம் படம் முடிந்தும் வரும். உடன் பணியாற்று போலீஸ் அதிகாரியாக, அவரும் தனக்கான பணியை செய்திருக்கிறார். விஜே பனி, சீரியல் நடிகை என இளம் பெண்கள் கூட்டம், படத்தின் காட்டத்தை குறைத்திருக்கின்றனர்.
படத்தில் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது, பைக்கோடு பயணிக்கும் கேமராவை சுமந்த நிரவ் ஷா, இயா போக்கோவிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தாலும் தகும்! அதே போல் தான் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனும். ஆக்ஷன் காட்சிகள் பாதி, ஆகாயத்தில் தான் நடக்கிறது. இதையெல்லாம் சேதாரம் இல்லாமல் எடுக்க வாய்ப்பே இல்லை. அதற்காகவே தனியா திலிப்பை பாராட்டலாம். இன்னொருவர், யுவன் சங்கர் ராஜா. படத்தில் புதிய அம்மா பாடல் ஒன்று வருகிறது. அதுவும் கேட்கும் படியாக இருக்கிறது. பின்னணியை சொல்ல வேண்டியதில்லை. அஜித்-யுவன் கூட்டணி, இந்த இடத்திலும் சோடை போகவில்லை.
போனி கபூர் போன்ற ஒரு பெரிய தயாரிப்பாளர், தன் தலைமையில் சுமந்து கொண்டு வந்த பாரத்தை ஒரு வழியாக இறக்கிவிட்டிருக்கிறார். 3 ஆண்டுகாளாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை, வற்றாத ஜீவநதியாக இல்லாவிட்டாலும், வறண்டு போன தொண்டைக்கு தாகம் தீர்த்த டம்ளராக இருந்திருக்கிறது. வலிமை பிறரை அளிக்க அல்ல, காப்பாற்ற என்கிறார் அஜித். அந்த வகையில், நூலிழையில் காப்பாற்றப்பட்டிருக்கிறது படம். படத்தின் துவக்கத்தில் இருந்த ட்ரிக்ஸ், ட்விஸ் காட்சிகள் தொடராமல் போனதும், பைக் டானிக் ஓவர் டோஸ் ஆனதும் கொஞ்சம் நெருடல் தான். ஆனாலும், எத்தனை குறை இருந்தாலும் அத்தனையையும் தன் தோலில் சுமந்து, கடைசி வரை தான் ஒரு வலிமையானவன் என்பதை நிரூபித்திருக்கிறார் ஓப்பனிங் கிங் அஜித் குமார். வலிமை... குறை சொல்வது எளிமை...!