IND vs SL 1st ODI: பேட்டிங்கில் சரவெடி... சதத்தை நழுவவிட்ட ரோகித். சுப்மன்கில்..! ரசிகர்கள் சோகம்...!
இந்திய கேப்டன் ரோகித்சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 83 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்திய அணியின் பேட்டிங்கை கேப்டன் ரோகித்சர்மாவும், சுப்மன்கில்லும் தொடங்கினர்.
இருவரும் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்ப்ளேவிலே இருவரும் இணைந்து பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக ரோகித்சர்மா அதிரடியாகவே ஆடினார். சமீபகாலமாக பேட்டிங்கில் தடுமாறி வந்த ரோகித்சர்மா, நீண்ட இடைவேளைக்கு பிறகு திரும்பிய இந்த போட்டியில் அசத்தலாக பேட் செய்தார்.
அவருக்கு சுப்மன்கில் நன்றாக ஒத்துழைப்பு அளித்தார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் சீராக சென்று கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் விளாசினர். நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடிய சுப்மன்கில் அணியின் ஸ்கோர் 143 ரன்கள் எட்டியபோது ஆட்டமிழந்தார். கேப்டன் ஷனகா பந்தில் 60 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்திருந்த சுப்மன்கில் அவுட்டானார்.
இதையடுத்து, ரோகித்சர்மாவுடன் விராட்கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித்சர்மா தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரிகள், சிக்ஸர்கள் என விளாசிய ரோகித்சர்மா நீண்ட இடைவேளைக்கு பிறகு சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரர் மதுஷனகா பந்தில் துரதிஷ்டவசமாக இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார்.
இதனால், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித்சர்மா 67 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களுடன் ஆடி வருகிறது.