IND Vs SA Match Highlights: தென்னாப்ரிக்காவை தவிடு பொடியாக்கிய இந்தியா - 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
IND Vs SA Match Highlights: உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
IND Vs SA Match Highlights: உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய அணி தொடர்ந்து எட்டாவது வெற்றியை பதிவு செய்து தோல்வியையே பெறாத அணி என்ற பெருமையை தொடர்கிறது
தென்னாப்ரிக்காவை மூட்டை கட்டிய இந்தியா:
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி நிர்ணயித்த 327 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சையும் மறுமுனையில் ஷமியின் வேகப்பந்து வீச்சையும் எதிர்கொள்ள முடியாமல், தென்னாப்ரிக்கா அணி செய்வதறியாமல் விக்கெட்டுகளை வாரிக்கொடுத்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் வெறும் 5 ரன்களில் நடையை கட்டினார்.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:
கேப்டன் பவுமா 11 ரன்களிலும், மார்க்ரம் 9 ரன்களிலும், கிளாசென் ஒரு ரன்னிலும், வான் டெர் டசன் 13 ரன்களிலும், மில்லர் 11 ரன்களிலும், கேஷவ் மகாரஜ் 7 ரன்களிலும், ஜான்சென் 14 ரன்களிலும், ரபடா 6 ரன்களிலும் மற்றும் நிகிடி ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
இந்தியா பிரமாண்ட வெற்றி:
இறுதியில் 27.1 ஓவர்கள் முடிவிலேயே தென்னாப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார். இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்ற, இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரோகித் சர்மா, இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தார். வெறும் 24 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 40 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கோலி கூட்டணி, நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஸ்ரேயாஸ் அய்யர் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 77 ரன்கள் சேர்த்து இருந்தபோது நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கே. எல். ராகுல் 8 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 22 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். மறுமுனையில் கோலி நிலைத்து நின்று ஆடிய கோலி, 119 பந்துகளில் 100 ரன்களை விளாசி தனது 49வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய சச்சினின் சாதனையை சமன் செய்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய 5 அணி விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை சேர்த்தது. அந்த இலக்கை எட்ட முடியாமல் தென்னாப்ரிக்கா அணி, 83 ரன்களுக்கு ஆட்டமிழக்க 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.