(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA 1st ODI: “நான் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்” ... ராகுலுடன் சேர்ந்து ஆடப்போவது தவானா..?..ருதுராஜா..?
ரோகித் மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கும்போது, மத்திய வரிசையில் ராகுல் இந்தியாவுக்காக பல்வேறு நிலைகளில் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கும் எல் ராகுல், ரோஹித் சர்மா இல்லாத நிலையில், தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவேன் என்று கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, கே.எல். ராகுல் ஆன்லைனில் பேசினார். அப்போது, ரோகித் இல்லாததால் அவர் இடத்தில் தான் இறங்குவேன் என்பதை உறுதிப்படுத்தினார்
இதுதொடர்பாக கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், ‘கடந்த 14-15 மாதங்களில் நான் 4, 5, வெவ்வேறு நிலைகளில் பேட்டிங் செய்தேன். தற்போது ரோகித் சர்மா இல்லாததால், நான் ஓப்பனிங் பேட்டிங் செய்வேன். நான் நிறைய திட்டங்களையும் இலக்குகளையும் கொண்டவன் அல்ல. நான் ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை மட்டும் ஆட விரும்புகிறேன். அப்படித்தான் நான் எனது கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறேன். அப்படித்தான் அணியை வழி நடத்த நான் பார்ப்பேன். விராட் கோலி மற்றும் தோனியிடம் கற்றுக்கொண்ட அனைத்தையும் அணியை வழிநடத்த பயன்படுத்துவேன். தோனி மற்றும் விராட் கோலி போன்ற சிறந்த கேப்டன்களின் கீழ் நான் விளையாடியுள்ளேன். அணிக்கு கேப்டனாக இருக்கும்போது, அவர்களிடம் கற்றதை பயன்படுத்துவேன் என்று நம்புகிறேன். நான் தவறுகளைச் செய்வேன். ஆனால் நான் கற்றுக்கொண்டு சிறப்பாக வருவேன். விராட் கோலி ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளார். இது அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒன்று, கேப்டனாக என்னால் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
ரோகித் மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கும்போது, மத்திய வரிசையில் ராகுல் இந்தியாவுக்காக பல்வேறு நிலைகளில் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தவானை தேர்வு செய்யாத நிலையில், டி20 போட்டிகளில் இந்தியாவின் வழக்கமான தொடக்க ஆட்டக்காரராக ராகுல் நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலின் தொடக்க ஜோடியாக தவான் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலி இல்லாத நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு ராகுல் கேப்டனாக இருந்தார். மேலும் தொடரின் முடிவில் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ராகுல் அந்த இடத்திற்கு முன்னணியில் இருப்பவர்களில் ஒருவராகக் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை நடைபெறுகிறது. பார்ல் நகரில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்