KL Rahul Century: பாக்சிங் டே சொதப்பல் டூ பாக்சிங்டே சதம் : கே.எல்.ராகுலும் டெஸ்ட் கிரிக்கெட்டும் !
2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் கே.எல்.ராகுல் அறிமுகமாகினார்.
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இந்திய அணியில் மாயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் விரட் கோலியும் 35 ரன்கள் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 216 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உதவியுடன் சதம் கடந்து அசத்தினார். இந்த சதத்தின் மூலம் அவர் பல சாதனைகைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் அணியில் கே.எல்.ராகுல் சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளார். சொதப்பலாக தொடங்கிய கே.எல்.ராகுலின் டெஸ்ட் அறிமுகம் முதல் அவரின் 7 சதங்கள் வரை என்ன நடந்தது?
மோசமான பாக்சிங் டே டெஸ்ட் அறிமுகம்:
2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா-இந்தியா பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் மூலம் கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம்பிடித்தார். அந்தப் போட்டியில் நடுகள வரிசையில் கே.எல்.ராகுல் களமிறங்கினார். அதில் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களுடனும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன்னுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் அவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது. அதிலும் அது அவருடைய அறிமுக போட்டியாக மிகவும் பெரிய வருத்தமாக அமைந்தது.
ஓப்பனராக ராகுல் ருத்ராண்டவம்:
அந்த வருதத்தை அதே தொடரிலேயே அவர் மாற்றியது தான் அவருடைய டெஸ்ட் வாழ்க்கை பெரிய திருப்பமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் அவர் தொடக்க ஆட்டக்காரராக சிட்னி டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே 110 ரன்கள் அடித்து அசத்தினார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தையும் பதிவு செய்தார். இந்த சதம் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.
ராகுலின் டெஸ்ட் சதங்கள்:
முதல் சதத்திற்கு பிறகு கே.எல்.ராகுல் தான் டெஸ்ட் தொடரில் விளையாடும் அனைத்து நாடுகளிலும் சதம் அடிக்க தொடங்கினார். அதுவே அவரின் வளர்ச்சிக்கு பெரிய ஏணியாக இருந்தது. 2015ஆம் ஆண்டே இலங்கையின் கொழம்புவில் நடைபெற்ற போட்டியில் சதம் கடந்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தான் விளையாடிய அனைத்து நாடுகளிலும் தற்போது வரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் இதுவரை 7 சதம் அடித்துள்ளார்.
110 vs ஆஸ்திரேலியா (சிட்னி) (2015)
108 vs இலங்கை (கொழும்பு) (2015)
158 vs வெஸ்ட் இண்டீஸ் (கிங்ஸ்டன்) (2016)
199 vs இங்கிலாந்து (சென்னை) (2016)
149 vs இங்கிலாந்து (ஓவல்) (2018)
129 vs இங்கிலாந்து (லார்ட்ஸ்) (2021)
122* vs தென்னாப்பிரிக்கா (செஞ்சுரியன்) (2021)
இவ்வாறு ஆஸ்திரேலியா,இலங்கை,இந்தியா,இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என டெஸ்ட் போட்டிகளில் இதுவரை களமிறங்கியுள்ள அனைத்து நாடுகளிலும் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் 2014ஆம் ஆண்டு பாக்சிங் டே டெஸ்டின் சோகமான வரலாற்றை 2021ஆம் ஆண்டு பாக்சிங்டே டெஸ்டின் மூலம் மாற்றி எழுதியுள்ளார்.
ராகுலின் சத சாதனைகள்:
நேற்று தன்னுடைய 7ஆவது சதத்தின் மூலம் ஆசியாவிற்கு வெளியே அதிகம் சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலிலும் இவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஆசியாவிற்கு வெளியே அதிக சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள்:
ஆசியாவிற்கு வெளியே அதிக சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள்:
வீரர்கள் | சதங்கள் |
சுனில் கவாஸ்கர் (81 இன்னிங்ஸ்) |
15 |
கே.எல்.ராகுல் (34 இன்னிங்ஸ்) | 5 |
வீரேந்திர சேவாக் (59 இன்னிங்ஸ்) | 4 |
வினோ மன்கட் (19 இன்னிங்ஸ்) |
3 |
ரவிசாஸ்திரி (19 இன்னிங்ஸ்) |
3 |
இவை தவிர ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் சதம் கடந்த தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலிலும் கே.எல்.ராகுல் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா,இங்கிலாந்தில் சதம் கடந்த தொடக்க ஆட்டக்காரர்கள்:
சையித் அன்வர் (பாகிஸ்தான்)
கிறிஸ் கெயில்(வெஸ்ட் இண்டீஸ்)
கே.எல்.ராகுல்(இந்தியா)
இவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் 41 போட்டிகளில் தன்னுடைய முதல் 7 சதங்களில் பல சாதனை பட்டியலில் கே.எல்.ராகுல் இணைந்துள்ளார். இந்த சிறப்பான வளர்ச்சி தான் தற்போது அவரை துணை கேப்டன் வளர்ச்சி வரை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பிற்கு வந்த பிறகு முதல் போட்டியிலேயே சதம் கடந்து இவர் அசத்தியுள்ளார்.
மேலும் படிக்க: ரன் மழைக்கு இடையூறு செய்யும் மழை: இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க தாமதம்!