Ind vs SA, 1st Innings Highlights: குயின்டின் டி காக் சதம் : வான்டெர் டுசென் அரைதசம் - இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு
IND vs SA, 3rd ODI, Newlands Cricket Ground: கேப்டவுனில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி 288 ரன்களை இலக்காக தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி இன்று கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடி வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பேட்டிங்கைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அந்த அணியின் மலான் 1 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் ரிஷப்பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் தெம்பா பவுமா 8 ரன்களில் ரன் அவுட்டானார். பின்னர், களமிறங்கிய எய்டன் மார்க்ரமும் 15 ரன்களில் தீபக் சாஹர் பந்தில் வெளியேற தென்னாப்பிரிக்க தடுமாறியது.
70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணியை குயின்டின் டி காக்கும், வான்டெர் டு சென்னும் வலுவான நிலைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினர். டி காக் – வான்டெர் டு சென் ஜோடி பொறுப்பாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும் ரன்களைச் சேர்த்தது. இதனால், ரன்விகிதமும் சீராக நகர்ந்தது.
சிறப்பாக ஆடிய டி காக் 108 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் சதமடித்த சிறிது நேரத்தில் வான்டெர் டு சென்னும் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 214 ரன்களை எட்டியபோது பும்ரா பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து குயின்டின் டி காக் ஆட்டமிழந்தார். அவர் 124 ரன்களுக்கு வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் வான்டர் டு சென்னும் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய ஆண்டில் பெலாக்வோ 4 ரன்களிலும், ட்வெய்ன் ப்ரெடோரியஸ் 20 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசியில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் சிறிது நிலைத்து நின்று ஆடினார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 287 ரன்களை எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் பந்துகளுக்கு ஏற்ப ரன்களை விட்டுக்கொடுத்தனர். அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 9.5 ஓவர்களில் 59 ரன்களை விட்டுக்கொடுத்த 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா 10 ஓவர்கள் வீசி 52 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். தீபக் சாஹர் 8 ஓவர்கள் வீசி 53 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்