IND Vs SA 2ND T20: அடித்து ஆடிய இந்தியா - மழை வைத்த ஆப்பு, 2வது டி-20 போட்டியில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி
IND Vs SA 2ND T20 Highlights: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், டக்வர்த் லூயிஸ் முறைப்படி தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.
IND Vs SA 2ND T20 Highlights: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், தென்னாப்ரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி பேட்டிங்:
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு அதிர்ச்சி:
மழை குறுக்கிட்டதால் ஒரு இன்னிங்ஸிற்கான ஓவர்கள் 19.3 ஆக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஷ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருமே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மாவும் 29 ரன்களில் நடையை கட்டினார். இதனால், 55 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது.
அடித்து ஆடிய சூர்யகுமார் - ரிங்கு சிங்:
இதையடுத்து நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சூர்யகுமார் மற்றும் ரிங்கு சிங் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்களிலும், ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
தென்னாப்ரிக்காவிற்கு 181 ரன்கள் இலக்கு:
இறுதியில் ஜடேஜா 19 ரன்கள் சேர்க்க, 19.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7விக்கெட்டுகளை இழந்து, 180 ரன்களை சேர்த்தது. தென்னாப்ரிக்கா சார்பில் கோட்ஸீ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஜான்சென், வில்லியம்ஸ், ஷம்சி மற்றும் மார்க்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
தென்னாப்ரிக்கா அணி அதிரடி:
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், டக்வர்த் லூயிஸ் முறைப்படி தென்னாப்ரிக்கா அணி 15 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரரான ஹென்றிக்ஸ் அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தார். அதிரடியாக ஆடிய அவர் 27 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் மார்க்ரம் 30 ரன்களில் ஆட்டமிழக்க, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இருப்பினும் அடுத்தடுத்து வந்த வீரர்களும் அதிரடியாக ரன் சேர்த்ததால், 13.5 ஓவர்களிலேயே தென்னாப்ரிக்கா அணி இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்ரிக்கா அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி-20 போட்டி நாளை நடைபெற உள்ளது.