IND vs PAK: மறக்க முடியுமா அந்த ஆட்டத்தை? பாகிஸ்தான் தூக்கத்தை கெடுத்த சேஸ் மாஸ்டர் விராட் கோலி - நினைவலை
IND vs PAK: கடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் தத்தளித்த இந்திய அணியை விராட் கோலி தனி ஆளாக போராடி வெற்றி பெற வைத்த அவரது ஆட்டம் என்றுமே கிரிக்கெட் ரசிகர்கள் சிலாகிக்கும் தருணம்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.
மறக்க முடியாத இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்:
வழக்கமாக இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகமும், எதிர்பார்ப்பும் ஏற்படும். டி20 போட்டியிலும் சரி, டி20 உலகக்கோப்பையிலும் சரி இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் போட்டி கடந்த 2022ம் ஆண்டு மெல்போர்ன் நகரத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியே ஆகும். மிகவும் இக்கட்டான சூழலில், தோல்வி பிடியில் சிக்கிக் கொண்ட இந்திய அணியை தனது பொறுப்பான மற்றும் திறமையான ஆட்டத்தால் விராட் கோலி வெற்றி பெற வைப்பார்.
உலகின் மிகவும் முக்கியமான கிரிக்கெட் மைதானமான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
160 ரன்கள் இலக்கு
பாகிஸ்தான் அணிக்காக கேப்டன் பாபர் அசாமும், விக்கெட் கீப்பர் ரிஸ்வானும் ஆட்டத்தை தொடங்கினர். அதற்கு முந்தைய டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திய இந்த ஜோடியை விரைவில் அவுட்டாக்க வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு இருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய அவரது முதல் ஓவரின் முதல் பந்திலே பாபர் அசாம் டக் அவுட்டானார். மறுமுனையில் தடுமாறிக் கொண்டிருந்த முகமது ரிஸ்வான் அர்ஷ்தீப் சிங் பந்தில் 4 ரன்களுக்கு அவுட்டானார்.
15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு மசூத் – இப்திகார் அகமது கை கொடுத்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இப்திகார் அகமது சிக்ஸரும், பவுண்டரி என விளாசினார். அவரை ஷமி அவுட்டாக்கினார். அவரது பந்தில் 51 ரன்களுக்கு இப்திகார் வெளியேற, அடுத்து வந்த ஷதாப் கான், ஹைதர் அலி, நவாஸ் , ஆசீப் அலி ஒற்றை ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி வரை மசூத் ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 5 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்தார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
31 ரன்களுக்குள் 4 விக்கெட்:
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் ஆட்டத்தை தொடங்கினர். நசீம்ஷா பந்தில் கே.எல்.ராகுல் போல்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஹரீஷ் ராஃப் பந்தில் ரோகித் சர்மாவும் 4 ரன்களுக்கு அவுட்டானார். 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்காக விராட் கோலி களமிறங்கினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 15 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த இடது கை பேட்ஸ்மேன் அக்ஷர் படேலும் 2 ரன்களுக்கு ரன் அவுட்டானார். 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணிக்காக விராட் கோலி – ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
தனி ஆளாக போராடிய சேஸ் மாஸ்டர்:
பவர்ப்ளேவிற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று பாகிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் உற்சாகமாக இருந்தனர். ஆனால், ஹர்திக் பாண்ட்யாவை மறுமுனையில் வைத்துக்கொண்டு விராட் கோலி தனி ஆளாக போராடினார். ஹர்திக் பாண்ட்யா ஓரிரு ரன்களாக எடுத்து விராட் கோலிக்கு துணை நின்றார்.
இதனால், தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணி மீண்டு வந்து 100 ரன்களை கடந்தது. நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலியும் அரைசதம் விளாசினார். இதனால், பாகிஸ்தான் வீரர்கள் பதற்றத்திற்கு ஆளாகினர். விராட் கோலியை வீழ்த்துவதற்காக ஷாகின் அப்ரிடி, ஹாரீஷ் ராஃப், நசீம் ஷா என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களை பாபர் அசாம் மாறி, மாறி பயன்படுத்தினார்.
ஆனாலும், விராட் கோலி ஜோடி நிதானமாகவும், அதேசமயம் அடித்தும் ஆடினர். விராட் கோலி அவ்வப்போது ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். குறிப்பாக, முகமது நவாஸ் பந்துவீச்சை இந்திய வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். கடைசி 18 பந்துகளுக்கு 48 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
மறக்க முடியாத சிக்ஸ்:
ஷாகின் அப்ரீடி வீசிய அந்த 18வது ஓவரில் 3 பவுண்டரியுடன் 17 ரன்களை இந்தியா எடுத்தது. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியை தனது பந்துவீச்சால் மிரட்டிக் கொண்டிருந்த ஹாரீஷ் ராஃப் 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் அவர் விராட் கோலியின் உடலுக்கு வீசிய பந்தை விராட் கோலி விலகி ராஃப் தலைக்கு மேலே நேராக ஒரு சிக்ஸர் விளாசுவார். கிரிக்கெட் வரலாற்றில் எப்போதுமே அந்த சிக்ஸர் எப்போதுமே தனித்துவமானதாக பேசப்படும். அந்த ஷாட் அப்படியொரு ஷாட் என்றே கூறலாம். முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் இப்படியொரு சிக்ஸரை ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸனால் மட்டுமே அடிக்க முடியும் என்று கோலிக்கு புகழாரம் சூடியிருப்பார்..
அதற்கு அடுத்த பந்தையும் விராட் கோலி சிக்ஸருக்கு விளாசி பாகிஸ்தான் பதற்றத்தை இன்னும் அதிகரிப்பார். கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலை இந்தியாவுக்கு ஏற்படும். வேறு பந்துவீச்சாளர் இல்லாததால் முகமது நவாஸிடம் பாபர் அசாம் தருவார். முதல் பந்திலே ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு அவுட்டாவார். அப்போது, களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுப்பார்.
இந்தியா த்ரில் வெற்றி:
அந்த ஓவரின் 4வது பந்தில் விராட் கோலி சிக்ஸர் அடிப்பார். அந்த பந்து நோ பாலாகவும் வர இந்திய அணிக்கு கடைசி 2 பந்தில் 2 ரன் தேவைப்படும். அப்போது, கிரீசில் இருந்த தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் ஆக 1 பந்தில் 2 ரன் தேவைப்படும். அப்போது, களத்திற்கு அஸ்வின் வருவார். அவருக்கு நவாஸ் வீசிய பந்து ஒயிடாக அமைய, கடைசி 1 பந்துக்கு 1 ரன் என்ற நிலை வரும். அந்த பந்தில் லாவகமாக அஸ்வின் ஒரு ரன் எடுக்க இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறும்.
31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணியை தனி ஆளாக மீட்டெடுத்த விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 53 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் இணைந்து 82 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி வெற்றி பெற்றதும் மைதானத்திற்குள் ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலியை கட்டியணைத்து அவரை தனது தோளில் தூக்குவார். ஒரு ஜாம்பவான் இன்னொரு ஜாம்பவானை தூக்கி கொண்டாடிய அந்த காட்சி எப்போதும் இந்திய ரசிகர்களுக்கு இனிப்பான தருணம். அப்படி ஒரு அழகான மறக்க முடியாத போட்டியாக இந்த உலகக்கோப்பையிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அமையுமா? என்று பார்க்கலாம்.