IND vs NZ 2nd T20: ஒரு சிக்ஸர் கூட இல்லை.. அதிகபட்ச ஸ்கோரே 26 தான்.. மோசமான ரெக்கார்ட்ஸை அள்ளிய IND - NZ டி20 போட்டி!
நியூசிலாந்து அணிக்காக ஆலன் மற்றும் கான்வே 21 ரன்கள் எடுத்ததே மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான டி20யில் நியூசிலாந்து அணியின் குறைந்த ஸ்கோராக இது பதிவானது.
100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு பந்து மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் சென்றது. 100 ரன்கள் எடுக்க கிட்டத்தட்ட 20 வது ஓவரை நோக்கி பயணிக்கும்போது சூர்யகுமார் யாதவ் 20வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார். அந்த பவுண்டரிதான் சூர்யகுமார் யாதவ் அடித்த ஒரே பவுண்டரி என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அதுதான் உண்மை.
ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ்:
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அந்த அணியில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் எடுத்திருந்தார். அதே நேரத்தில், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மார்க் சாப்மேன் தலா 14 ரன்களும், ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே தலா 11 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
100 ரன்களை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாகவே சூர்யகுமார் யாதவ், ஒரு பவுண்டரியுடன் 31 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அதே நேரத்தில், இஷான் கிஷான் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் மற்றும் சோதி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சூர்யகுமார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் கூட இல்லை:
இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்காக ஆலன் மற்றும் கான்வே 21 ரன்கள் எடுத்ததே மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் சூர்யகுமார் மற்றும் ஹர்திக் இடையே இருந்தது. இருவரும் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் சேர்த்தனர். இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் சிக்ஸர் அடிக்கவில்லை. அதாவது, இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை. இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தம் 239 பந்துகள் சிக்ஸர் அடிக்காமல் வீசப்பட்டுள்ளது. சர்வதேச டி20யில் இதுவே அதிகபட்சமாகும். முன்னதாக, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து இடையே 2021 ஆம் ஆண்டு மிர்பூரில் 238 பந்துகள் சிக்ஸர் இல்லாமல் வீசப்பட்டிருந்தது.
சிக்ஸர் இல்லாமல் வீசப்பட்ட அதிக பந்துகள் |
அணிகள் | இடம் | ஆண்டு |
239 | IND vs NZ | லக்னோ | 2023 |
238 | BAN vs NZ | மிர்பூர் | 2021 |
223 | ENG vs PAK | கார்டிஃப் | 2010 |
207 | SL vs IND | கொழும்பு | 2021 |
ஒரே போட்டியில் 30 ஓவர்கள் வீசிய சுழற்பந்து வீச்சாளர்கள்:
இந்தப் போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்கள் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 30 ஓவர்கள் வீசினர். இந்தியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் 13 ஓவர்களையும், நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் 17 ஓவர்களையும் வீசினர். சர்வதேச டி20 போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய அதிக ஓவர்கள் இதுவாகும். இதற்கு முன் இந்த சாதனை வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. 2012ல் மிர்பூரில் நடந்த அந்த போட்டியில், இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 28 ஓவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களால் வீசப்பட்டது.
நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் 17 ஓவர்கள் வீசினர். சர்வதேச டி20 போட்டியில் ஒரே அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய மூன்றாவது அதிக ஓவர்கள் இதுவாகும். அதன் சாதனை ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் பெயரில் உள்ளது. 2010ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வேயும், 2012ல் கொழும்பில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணியும் தலா 18 ஓவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது.
இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஆட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.