Jio Hotstar: மகாமட்டமான குவாலிட்டி! இதுல எப்படி மேட்ச் பாக்குறது? ரசிகர்களை கடுப்பேத்திய ஹாட்ஸ்டார்
Jio Hotstar: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஜியோ ஹாட்ஸ்டாரில் மிகவும் மோசமான தரத்தில் ஒளிபரப்பாவது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் நகரத்தில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடந்து வருகிறது.
மோசமான தரத்தில் ஹாட்ஸ்டார் லைவ்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரசிகர்கள் பட்டாளங்களை கொண்ட இந்த இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இந்தியாவில் ஓடிடி-யில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொரக்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இங்கிலாந்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த போட்டி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தியாவில் தொலைக்காட்சியில் சோனி தொலைக்காட்சியிலும், ஓடிடி தளத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலை செய்யப்பட்டு வரும் நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாரின் தரம் மிக மிக மோசமாக இருக்கிறது. இதையடுத்து, ஜியோ ஹாட்ஸ்டாரை கிரிக்கெட் ரசிகர்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இப்படி இருந்தால் எப்படி பார்ப்பது?
மேலும், கிரிக்கெட் போட்டியின் ரன்களை ஒளிபரப்பும் ரன் அட்டவணை கார்டும் மிகவும் மோசமாக இருப்பதாக தொடர்ந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஸ்கை ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனியில் இருப்பது நன்றாக இருப்பதாகவும், ஜியோ ஹாட்ஸ்டாரின் ஸ்கோர் அட்டவணை வடிவமைப்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். இதனால், இப்படி இருந்தால் போட்டியை எப்படி பார்ப்பது? என்றும் விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்களின் தொடர் விமர்சனத்தைத் தொடர்ந்து தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் போட்டியின் நேரலை ஒளிபரப்பு தரம் சற்று அதிகரித்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஜியோ ஹாட்ஸ்டாரை விட நல்ல தரத்தில் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அப்செட்டில் ரசிகர்கள்:
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ஆனால், அவர்களை அதிருப்தி அடைய வைக்கும் வகையில் ஜியா ஹாட்ஸ்டார் இவ்வாறு ஒளிபரப்பை செய்வது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆடி வரும் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 92 ரன்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் ரன் ஏதுமின்றி டக் அவுட்டானார். தற்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.




















