IND vs ENG: 'அவரை பாத்து கத்துக்கோங்க’ : சொதப்பும் சுப்மன் கில்லுக்கு சஞ்சய் மஞ்ரேக்கரின் முக்கிய அறிவுறுத்தல்
பேட்டிங் நுட்பத்தை இந்திய அணியின் பேட்ஸ்மென் சுப்மன் கில் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுறுத்தியுள்ளார் .
முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி:
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 426 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்த வரை முதல் இன்னிங்ஸில் நன்றாக இருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடியது. அதன்படி, அந்த அணி மொத்தம் 420 ரன்களை குவித்தது. அதேநேரம் இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்த வரை 16 ஓவர்கள் மட்டுமே வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்களை மெய்டன் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி சதம் விளாசிய ஒல்லி போப் ஆட்டம் தான். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினார். அதன்படி 278 பந்துகள் களத்தில் நின்ற அவர் 21 பவுண்டரிள் உட்பட 196 ரன்களை விளாசினார்.
அவரை பார்த்து கத்துக்கோங்க:
இந்நிலையில் ஒல்லி போப் பயன்படுத்தும் பேட்டிங் நுட்பத்தை இந்திய அணியின் பேட்ஸ்மென் சுப்மன் கில் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுறுத்தியுள்ளார் . இது தொடர்பாக பேசிய அவர், “போப் விளையாடிய விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதேநேரம் போப் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ரன்கள் எடுப்பதில் குறியாக இருந்தார். அணிக்கு எவ்வாறு ரன்களை பெற்றுத் தர வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிந்தது. இதைத்தான் நம்முடைய வீரர் சுப்மன் கில் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் இறங்கி ஆட முயற்சி செய்கிறார்.
அதனால்தான் நான் இதைச் சொல்கிறேன்”என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த 10 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சுப்மன் கில் திணறிவருகிறார். அதேபோல், இந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 23 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் முறையிலும் வெளியேறினார். இதனால் அவருக்கான டெஸ்ட் எதிர்காலம் அச்சத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூறி வரும் சூழலில் சஞ்சன் மஞ்ச்ரேக்கர் சுப்மன் கில்லுக்கு பேட்டிங் குறித்து அறிவுறுத்தியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
மேலும் படிக்க:IND vs ENG Test: பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை காலிசெய்த அஸ்வின்... கபில் தேவ் சாதனை சமன்! விவரம் இதோ!
மேலும் படிக்க:IND vs ENG Test: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சொதப்பல் பேட்டிங்; 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி