IND Vs ENG: கர்ஜிப்பாரா பும்ரா? இங்கிலாந்தை ஆல்-அவுட் ஆக்குமா இந்தியா? முதல் டெஸ்டில் வெற்றி யாருக்கு?
IND Vs ENG Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற, கடைசி நாளில் இந்திய அணி 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டி உள்ளது.

IND Vs ENG Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற, கடைசி நாளில் இங்கிலாந்து அணி 350 ரன்களை சேர்க்க வேண்டியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களை குவித்த நிலையில், இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை சேர்த்து இருந்தது.
அடுத்தடுத்து சதம்:
தொடர்ந்து நேற்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியதும் கேப்டன் கில் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். இந்த கூட்டணியை பிரிக்க இங்கிலாந்து எடுத்த முயற்சிகள் எந்த பலனையும் அளிக்கவில்லை. இதன் காரணமாக கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து சதங்களை பூர்த்தி செய்தனர். சுமார் 100 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில், ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். தொடர்ந்து, இந்திய அணி 400 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 118 ரன்கள் எடுத்திருந்தபோது பண்ட் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கே.எல். ராகுலும் 137 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி நான்காவது விக்கெட்டிற்கு 195 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அணியும் ரன் வேகமும் மளமளவென சரிந்தது.
இந்திய அணி ஆல்-அவுட்:
அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களில் கருண் நாயர் 20 ரன்களிலும், ஷ்ரதுல் தாக்கூர் 4 ரன்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிராஜ், பும்ரா மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் ஒரு ரன் கூட சேர்க்காமல் ஆட்டமிழந்தனர். இதனால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 ரன்களை சேர்த்தார். வெறும் 32 ரன்களுக்கு கடைசி 6 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. தொடர்ந்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, நான்காவது நாள் முடிவில் விக்கெட் எதையும் இழக்காமல் 21 ரன்களை சேர்த்துள்ளது.
வெற்றி யாருக்கு?
முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு, 350 ரன்கள் தேவைப்படுகிறது. வெற்றிக்காக அந்த அணி அதிரடியான பேட்டிங்கை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், இந்திய அணி வெற்றி பெற இங்கிலாந்தை ஆல்-அவுட்டாக்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா இரண்டாவது இன்னிங்ஸிலும் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம், முதல் இன்னிங்ஸில் கோட்டைவிட்டது போன்று இல்லாமல், இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங்கிலும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.



















