(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG 5th Test: இங்கிலாந்து டெஸ்ட்டில் அஸ்வின் ஓரங்கட்டப்பட்டது ஏன்..? இதுதான் காரணம்..!
IND vs ENG 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக இரண்டாவது ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் களமிறங்கியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்தியாவின் இன்னிங்சை சுப்மன்கில்லும், புஜாராவும் தொடங்கி ஆடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியில் அனுபவமிக்க ஆல்ரவுண்டரான ரவிச்சந்திர அஸ்வின் வெளியில் உட்காரவைக்கப்பட்டுள்ளார். கடந்த முறை இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின், தொடர்ச்சியாக வெளியில் உட்காரவைக்கப்பட்ட பிறகு கடுமையான விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று தொடங்கியுள்ள எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியிலும் அவர் களமிறக்கப்படாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இன்றைய போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படாததற்கு ஆடுகளம்தான் பிரதான காரணம் ஆகும். போட்டி நடைபெற்று வரும் எட்ஜ்பாஸ்டன் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் ஆகும்.
இந்த ஆடுகளத்தில் பவுன்சர்கள் சரமாரியாக எழும். அவ்வாறு எழும்போது விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகவும் எளிதாக இருக்கும். பழைய பந்துகளில் பவுன்சர் வீசுவதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். மேலும், ஆட்டம் செல்ல செல்ல பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களிடம் கொடுக்கப்படும் டியூக் பந்துகளில் மிகவும் ரசித்து பந்துவீசலாம்.
சொந்த மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக ஆடும் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் பிராட்டிற்கும் இந்த மைதானம் மிகவும் பிடித்த மைதானம் என்றே சொல்லலாம். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக ஜேம்ஸ் ஆண்டர்சன் 42 விக்கெட்டுகளுடனும், ஸ்டூவர்ட் பிராட் 40 விக்கெட்டுகளுடனும் முன்னணியில் உள்ளனர்.
ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் காரணத்தாலே, இந்திய அணியில் அஸ்வின் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இரண்டாவது ஆல்ரவுண்டராக வேகப்பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஷர்துல் தாக்கூர் இறக்கப்பட்டுள்ளார். முதன்மை ஆல்ரவுண்டராகவும், சுழற்பந்துவீச்சாளராகவும் ரவீந்திர ஜடேஜா களமிறக்கப்பட்டுள்ளார். மைதான சூழல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக வீசிய பந்துவீச்சாளராக அஸ்வின் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்