IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் இன்று தொடங்குகிறது
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது, மழை குறுக்கிடுமா எனபது தொடர்பான வானிலை விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதிக அழுத்தம் கொண்ட ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக, ரோகித் சர்மா தலைமையிலான அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது. அதன்படி, முதல்போட்டி இன்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஆனால் வங்கதேச தொடரை ஒத்திகையாக பார்க்கவில்லை என்றும், தொடரை கைப்பற்ற போராடுவோம் என்றும் கேப்டன் ரோகித் தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியை, ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் கண்டுகளிக்கலாம்.
இந்திய அணி நிலவரம்:
ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணிக்காக இன்றயை போட்டியின் மூலம் டெஸ்ட் அணிக்கு திரும்ப உள்ளனர். ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட, சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோருக்கு பதிலாக இருவரும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நட்சத்திர பேட்டர் விராட் கோலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மறுபுறம், ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்தை தொடர்வார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்கள், இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி தரக்கூடும்.
வங்கதேச அணி நிலவரம்:
நஜ்முல் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி சமீபத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை விழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே உற்சாகத்தில் இந்தியாவை வீழ்த்த முனைப்பு காட்டுகிறது. டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த அணியில் இந்த முறை நல்ல திறமையும் அனுபவமும் உள்ளது.
ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் போன்ற வீரர்கள் முக்கிய பங்காக இருப்பார்கள், அதே நேரத்தில் மெஹிதி ஹசன் மிராஸின் ஃபார்மும் முக்கியமானதாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவர் அணியின் நட்சத்திர வீரராக இருந்தார்.
மைதான விவரம்:
சென்னையில் நல்ல வெப்பம் மற்றும் ஈரப்பதம் இருக்கும். எந்தவொரு அணிக்கும் இது எளிதானது அல்ல. சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்வது சிறந்ததாக இருக்கும். நேரம் செல்ல செல்ல மைதானம் கடினமாகக் கூடும்.
வானிலை நிலவரம்:
டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், மீதமுள்ள நாட்களுக்கான டெஸ்ட் போட்டிக்கு எந்த இடையூறும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் வரலாறு:
இரு அணிகளும் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 11 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை, 2 போட்டிகள் டிராவில் முடிந்தன.
இந்தியா Vs வங்கதேசம் - பிளேயிங் லெவன்:
உத்தேச இந்திய அணி: ரோகித் சர்மா (கேட்ச்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப்
உத்தேச வங்கதேச அணி: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேட்ச்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் (வி.கே.), ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, நஹித் ராணா.