IND vs BAN Pitch Report: எப்படி இருக்கும் புனே மைதானம்... டாஸ் வெல்லும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பா?
நாளை (அக்டோபர் 19) நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் புனே மைதானம் குறித்தான தகவல்களை பார்ப்போம்.
உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவின் பத்து நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக, இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதேபோல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளையும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், தொடர் வெற்றிகளை சுவைத்து வரும் இந்திய அணி தனது 4 வது லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக புள்ளிப்பட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை வரும் அக்டோபர் 22 ஆம் தேதி எதிர்கொள்கிறது இந்தியா. அதேபோல், தாங்கள் விளையாடி முதல் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வியை பெற்ற வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. வலுவாக இருக்கும் இந்திய அணியை கடந்த 2007 ஆம் ஆண்டு வீழ்த்திய போல் இந்த முறை கண்டிப்பாக வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்க காத்திருக்கிறது வங்கதேச அணி.
புனே மைதானம்:
அந்தவகையில், புனோவில் உள்ள மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை (அக்டோபர் 19) மதியம் 2 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மைதானத்தில் 37,000 ரசிகர்கள் வரை அமர முடியும். அதேநேரம் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து தான் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இதுவரை இந்த மைதானத்தில் நடைபெற்ற 7 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடி இருக்கிறது. இதில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றியையும், 3 போட்டிகளில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
இந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி இருக்கிறார். அந்தவகையில் அவர் 444 ரன்கள் அடித்திருக்கிறார். அதில் 2 சதங்கள் அடக்கம்.
முதல் உலகக் கோப்பை போட்டி:
நாளை (அக்டோபர் 19) நடைபெறும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டி தான் முதல் உலகக் கோப்பை போட்டியாக அமைய இருக்கிறது. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஷ்குமார் பெற்றிருக்கிறார்.
அந்தவகையில் அவர், இந்த மைதானத்தில் 10 விக்கெட்டுகளை எடுத்து எதிரணிகளை மிரட்டி இருக்கிறார். அதேபோல் இங்கு அதிக ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றிருக்கிறது.
அதன்படி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது.
வெதர் ரிப்போர்ட்:
போட்டி நடைபெறும் நாளானா அக்டோபர் 19 ஆம் தேதி புனே நகரில் மழை பெய்வதற்கான சூழல் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. எனவே போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏதும் இல்லை. அதேநேரம் மேக மூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதான பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கிறது. இங்கு பவுண்டரிகள் அடிக்கும் தூரம் குறைவானது என்பதால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடலாம். மேலும், இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் களம் இறங்கும் அணியின் ஸ்கோர் 307 ரன்களை கடந்துள்ளது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தவும் ஏதுவான பிட்ச் இது.
இதுவரை இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் 4 முறை வெற்றி பெற்றுள்ளது என்பதால் நாளை டாஸ் வெல்லும் அணிக்கு சாதகம் அதிகமாக இருக்கும்.
அஸ்வினுக்கு வாய்ப்பிருக்கா?
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் களமிறக்கப்படவில்லை. ஆனால் நாளை நடைபெறும் போட்டியில் வங்கதேச அணியின் பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்களை கருத்தில் கொண்டு ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும் படிக்க: https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-ban-rohit-sharma-is-set-to-get-a-hat-trick-after-1569-days-145515
மேலும் படிக்க: Cricket World Cup: ’ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கமிட்ட ரசிகர்கள்... ஐசிசியிடம் புகாரளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!