IND vs BAN 2nd Test: ஆல்-அவுட் - வங்கதேசத்தை சுருட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் - பும்ரா அதகளம்
IND vs BAN 2nd Test: இந்திய அண்இக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
IND vs BAN 2nd Test: கான்பூரில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி ஆல்-அவுட் ஆனது. அதன்படி, அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஷ்வின் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் நாள் ஆட்டம்:
கடந்த 27ம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்கதேச அணி களமிறங்கியது. ஆனால், அவ்வப்போது மழை குறுக்கீடு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக, முதல் நாள் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிந்தது. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே சேர்த்தது.
வங்கதேச அணி ஆல்-அவுட்:
தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் மழை, மைதானத்தில் மழைநீர் வடியாதது போன்ற காரணங்களால், ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. ஒருவழியாக இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மொமினுல் ஹக் மட்டும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசி அசத்தினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி, 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொமினுல் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 107 ரன்களை சேர்த்து களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஷ்வின் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணி பேட்டிங்;
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 51 ரன்களை சேர்த்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள இந்திய அணி, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முனைப்பு காட்டுகிறது. வங்கதேச டெஸ்ட் தொடரை, 2-0 என கைப்பற்றினால், மீதமுள்ள 8 போட்டிகளில் மூன்றில் வென்றாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். ஆனால், கான்பூர் டெஸ்ட் டிரா ஆகவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி நடந்தால், உள்ளூரில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 எனவும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.