Jemimah Rodrigues: ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி - ஜெமிமா வெறித்தனம்
Jemimah Rodrigues IND Vs AUS: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதோடு, இந்திய அணி பல அரிய சாதனைகளையும் படைத்துள்ளது.

Jemimah Rodrigues IND Vs AUS: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் வென்ற கையோடு, இந்திய நொறுக்கிய முன்னாள் சாதனைகள் பல கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்திய அணி அபாரம்:
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்காவுடன் மோதப்போவது யார்? என்பதை உறுதி செய்யும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் லீக் சுற்றில் தோல்வியே காணாத ஆஸ்திரேலியாவிற்கு எதிராக, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி களமிறங்கியது. முதலில் களமிறங்கிய எதிரணி, லிட்ச்ஃபீல்டின் அபார சதம், எல்லிஸ் பெர்ரி மற்றும் கார்ட்னரின் அரைசதங்களால், 49.5 ஓவர்களில் 338 ரன்கள் சேர்த்தது.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனால், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன் ப்ரீத் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கேப்டன் 89 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த தீப்தி , ரிச்சா மற்றும் அம்ன்ஜோத் ஆகியோர் அதிரடியாக ரன் குவித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதேநேரம், மறுமுனையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நிலைத்து நின்று, 127 ரன்களை குவித்தார். இதனால், 48.3 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியதோடு, பல அரிய சாதனைகளையும் இந்தியா தகர்த்துள்ளது.
இந்திய அணி தகர்த்த சாதனைகளின் பட்டியல்:
7 முறை உலகக் கோப்பையை வென்றதோடு, நடப்பு சாம்பியனாகவும் இருக்கும், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் இந்தியா படைத்துள்ள சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்காகும். இந்த மாத தொடக்கத்தில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான லீக் கட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 331 ரன் சேசிங் முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2. ஒருநாள் உலகக் கோப்பை நாக் அவுட்டில் (ஆண்கள் அல்லது பெண்கள்) ஒரு அணி 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைத் சேஸ் செய்வது இதுவே முதல் நிகழ்வாகும்.
3. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் எடுக்கப்பட்ட மொத்த ரன்கள் 679 ஆகும். இது இதுவரை இல்லாத அதிகபட்சமாகும். இதற்கு முந்தைய சாதனை இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் எடுக்கப்பட்டதாகும் (678 ரன்கள், பிரிஸ்டல், 2017 உலகக் கோப்பை).
4. மகளிர் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சதம் அடித்த இளைய வீராங்கனை என்ற வரலாற்றை ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் (22 வயது) படைத்தார்.
5. ஆஸ்திரேலிய அணி 15 தொடர் வெற்றிகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வி கண்டிருந்தது.




















