IND vs AUS U19 WC Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை; இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா மகுடம்
IND vs AUS U19 WC Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள வில்லோவ்மோரே மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல்1 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் தனது அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸை ஹாரி டிக்ஸன் மற்றும் சாம் ஹான்ஸ்டஸ் ஆகியோர் தொடங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரன்கள் சேர்க்கவேண்டும் என நினைத்து தேவையற்ற ஷாட்களை தவிர்த்து வந்தனர். ஆனால் 8 பந்துகளை எதிர்கொண்ட சாம் தனது விக்கெட்டினை ராஜ் லிம்பானி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் சிறப்பாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். இருவரும் இணைந்து 20 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 90 ரன்களை எட்டவைத்துவிட்டனர். இருவரும் அரைசதத்தினை நெருங்கிக் கொண்டு இருந்தபோது இந்த கூட்டணியை இடது கை வேகப்பந்து வீச்சாளர் நமன் திவாரி கைப்பற்றினார். ஹாரி டிக்ஸன் 42 ரன்னிலும், ஹூஹ் வெய்ப்ஜென் 48 ரன்னிலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது சற்று சரிவை உண்டாக்கும் என எதிர்பார்த்தபோது, களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் சிறப்பாக விளையாடி சூழலை ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக மாற்றினார். ஆனால் ஹர்ஜாஸ் சிங் தனது விக்கெட்டினை 64 பந்தில் 55 ரன்கள் சேர்த்த நிலையில் சௌமி பாண்டே பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் அதிரடியாக 3 சிக்ஸர்களையும் 3 பவுண்டரிகளையும் பறக்கவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணியின் பந்துவீச்சாளார்கள் சற்று ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஆஸ்திரேலியா அணி 42 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் இரு அணி வீரர்களும் மிகவும் தீவிரமாக விளையாடினர். குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியின் டைல் எண்டர்ஸ்க்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணியால் தான் எதிர்பார்த்த ரன்களை எடுக்க முடியவில்லை. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளும் நமன் திவாரி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பந்து வீச்சாளர் முருகன் அபிஷேக் 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் கைப்பற்றவில்லை என்றாலும் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாக விளையாடினார்.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. ஆஸ்திரேலியா அணியின் அபாரமான பந்து வீச்சினால் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். 100 ரன்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 47 ரன்களும், டைல் எண்டர் பேட்ஸ்மேன் முருகன் அபிஷேக் 42 ரன்களும் சேர்த்திருந்தனர். இறுதியில் இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையை வென்றது.